பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் கடந்த 16 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “ஆதிபுருஷ்”. இத்திரைப்படம் இராமாயண காவியத்தை மையமாக வைத்து உருவாகிய திரைப்படம் ஆகும். இதில் பிரபாஸிற்கு ஜோடியாக கிரித்தி செனான் நடித்துள்ளார். மேலும் இதில் ராவணனாக செயிஃப் அலி கான் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்தபோது அதில் இடம்பெற்ற கிராஃபிக்ஸ் காட்சிகளை பார்த்த பலரும் பொம்மை படம் போல் இருப்பதாக கேலி செய்தனர். ஆதலால் கிராஃபிக்ஸ் காட்சிகளை மெருகேத்த இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அதன் படி கடந்த 16 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியானது.
“ஆதிபுருஷ்” திரைப்படத்தை ஓம் ராவ்த் என்பவர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவானாலும் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இத்திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் ஆஞ்சநேயருக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்படுவதாக படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி பல திரையரங்குகளிலும் ஆஞ்சநேயருக்காக இருக்கை ஒதுக்கப்பட்டது. மேலும் தெலுங்கானா பகுதியில் ஒரு திரையரங்கில் குரங்கு நுழைந்ததை ஆஞ்சநேயர் வந்துவிட்டார் என்று பார்வையாளர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போட்ட வீடியோவும் வைரல் ஆனது. இத்திரைப்படம் உருவானபோது இது ஒரு குறிப்பிட்ட கட்சியினரின் அரசியல் பிரச்சாரத்திற்காக உருவாக்கப்படும் திரைப்படம் என விமர்சனங்கள் எழுந்தது.
அதே போல் இத்திரைப்படம் உருவாகிய விதமே அந்நியமாக இருக்கிறது எனவும் இதில் இராமர் கதாப்பாத்திரத்தில் நடித்த பிரபாஸிற்கு மீசை இருக்கிறது எனவும் பலர் கூறினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, இராமர் கதாப்பாத்திரத்திற்கு மீசை இருப்பதன் பின்னணியை குறித்து பேசியுள்ளார்.

“இவர்களுடைய நோக்கம் மக்கள் ரசிக்கும் விதமாக ஒரு திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்பது அல்ல. இவர்களின் நோக்கம் வேறு ஒன்றாக இருப்பதுதான் காரணம். குறிப்பாக இராமர் கதாப்பாத்திரத்திற்கு மீசை வைத்தது கூட ஒரு விளையாட்டான சமாச்சாரம் கிடையாது. இராமர் கதாப்பாத்திரத்திற்கு மீசை வைத்ததற்கான உண்மையான நோக்கம் என்னவென்றால், கடவுளாக பார்க்கப்படும் இராமர் ஒரு ஆண்மையுள்ள வீரம் மிக்க கடவுளாக காட்டப்பட வேண்டும் என்ற நோக்கம்தான் காரணமாக இருக்கும்” என கூறியுள்ளார். எனினும் “ஆதிபுருஷ்” திரைப்படத்திற்கு தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வரவேற்பு இல்லை என்பதுதான் இதில் சோகம்.





