தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். அவரது மனைவி கேரக்டரில் சாய் பல்லவி நடித்துள்ளார். தீபாவளியன்று வெளியான இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அமரன் படம் வெளியாகி 16 நாட்கள் ஆன நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 280 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 135 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இன்னும் சில தினங்களில் தமிழ்நாட்டில் ரூ. 150 கோடியும், உலகளவில் 300 கோடி ரூபாயும் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த 14ம் தேதி சூர்யா நடித்த கங்குவா படம் வெளியானது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைத்து தயாரித்த இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். படம் ரிலீஸான முதல் நாள், முதல் காட்சியிலேயே கங்குவா படம் பார்த்த ரசிகர்கள், படத்தை மிக மோசமாக விமர்சித்தனர்.
படம் முழுக்க கத்திக்கொண்டே இருக்கிறார்கள். படத்தில் சிறிதும் கதை இல்லை. படமே புரியவில்லை. இசையமைப்பாளர் டிஎஸ்பி இசை என்ற பெயரில் இரும்பு பட்டரை போல இரைச்சல் செய்திருக்கிறார். இந்த கூச்சல், இரைச்சலில் படம் பிடிக்காதவர்கள் தியேட்டருக்குள் தூங்கவும் முடியவில்லை என்று புலம்பி தீர்த்தனர்.
கங்குவா படம் ரிலீஸ் ஆவதற்கு முன், தியேட்டர் உரிமையாளர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு உத்தரவிட்டதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. அதாவது, அமரன் படம் நன்றாக ஓடும் தியேட்டர்களில் கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம். அமரன் படம் அப்படியே ஓடட்டும் என்று கூறியிருக்கிறார்.
கங்குவா படம் சரியாக போகாது என அவர் ஏற்கனவே தெரிந்துதான் அப்படி சொன்னாரா என்று தெரியவில்லை. அதே போல் இப்போது 2 நாட்களில் மீண்டும் அமரன் படம் தியேட்டர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் அமரன் படத்துக்கு தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜாக்பாட்தான் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





