நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ளார். இதுவரை 68 படங்களில் நடித்த அவர் இப்போது தனது 69வது படம் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம்தான் விஜயின் கடைசி படம் என்றும் சொல்லப்படுகிறது. கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது.
விஜய் நடித்த படங்களில் பல படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருக்கின்றன. அதில் பெரும்பாலான படங்கள் ஆக்சன் காட்சிகள் நிறைந்த அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட படங்களாக உள்ளன. குறிப்பாக திருப்பாச்சி சிவகாசி கில்லி போக்கிரி திருமலை என பல படங்களை சொல்லலாம்.
அதே நேரத்தில் மிகவும் மென்மையான ஜாலியான கதைகளை கொண்ட படங்களிலும் நடித்து விஜய் ரசிகர்களின் மனங்களை ஜெயித்திருக்கிறார். குறிப்பாக பூவே உனக்காக காதலுக்கு மரியாதை துள்ளாத மனமும் துள்ளும் குஷி சச்சின் லவ் டுடே ப்ரண்ட்ஸ் போன்ற படங்களை அந்த வரிசையில் சொல்லலாம்.
நடிகர் விஜய் ஜெனிலியா ரகுவரன் பிபாஷா பாசு வடிவேலு தாடி பாலாஜி உள்ளிட்டோர் நடித்த படம் சச்சின். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். கடந்த 2005ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. குஷி போல இதுவும் காதலர்களை மையப்படுத்தி ஒரு கதையாக தான் இருந்தது.
முழுக்க முழுக்க ஊட்டியில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் விஜய் கல்லூரி மாணவராகவும், ஜெனிலியா கல்லூரி மாணவியாகவும் நடித்திருந்தார். அய்யாசாமி என்ற காமெடி கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தார். காதலர்களின் ஈகோ பிரச்னையை மையப்படுத்திய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போதும் இளம் வயது ரசிகர்களை கவரும் படமாக இது உள்ளது.
இந்நிலையில் சச்சின் படத்தை 20 ஆண்டுகளுக்கு பிறகு படத்தின் தயாரிப்பாளர் தாணு ரி ரிலீஸ் செய்கிறார். அந்த படம் வெளியான போது திரையிடப்பட்ட தியேட்டர்களின் எண்ணிக்கையை விட இந்த முறை அதிக தியேட்டர்களில் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார். ஏனெனில் கில்லி போல சச்சினும் வசூலை குவிக்க அவர் விரும்புகிறார். அதனால் மற்ற பெரிய படங்கள் எதுவும் வராத காலகட்டத்தில் மிக அதிக எண்ணிக்கை தியேட்டர்களில் சச்சின் ரசிகர்களை சந்திக்க வருகிறார். கில்லியாக சிக்ஸர் அடிப்பாரா என காத்திருந்து பார்க்கலாம்.





