தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத்குமார். அவர் நடிகராக வளர்ந்து வந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் இது. கடந்த 1999ம் ஆண்டில் ரோஜா கம்பெய்ன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்கபூர் இயக்கத்தில் வெளியான படம் ஆனந்த பூங்காற்றே. இந்த படத்தில் கதாநாயகனாக அஜீத்குமார் நடித்திருந்தார். கதாநாயகியாக மீனா நடித்திருந்தார்.
இந்த படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் நவரச நாயகன் கார்த்திக் நடித்திருந்தார். மேலும் மாளவிகா அம்பிகா மணிவண்ணன் வடிவேலு மயில்சாமி கோவை சரளா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
ஆனந்த பூங்காற்றே படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜீத்குமாருக்கு 22 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், படத்தின் ஹீரோ அஜீத்குமாருக்கு காலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 6 மாதங்கள் படப்பிடிப்பு தாமதமானது. அவருக்கு காலில் அடிபட்டு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
அஜீத்குமார் குணமடைய மாதக்கணக்கில் தாமதமானதால், இயக்குனர் ராஜ்கபூர் வேறு ஹீரோவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தார். அப்போது முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் இருந்த நடிகர் பிரசாந்தை ஒப்பந்தம் செய்ய முடிவானது. அதற்காக பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் தயங்கிய தியாகராஜன், பின்னர் பிரசாந்தை நடிக்க வைக்க ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து பிரசாந்த் கார்த்திக் மீனா ஆகியோர் இடம்பெற்ற ஒரு புதிய போட்டோ டைரி தயாரிக்கப்பட்டது. அஜீத்குமார் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது ஆனந்த பூங்காற்றே படக்குழுவினர் அவரை பார்க்க சென்றனர். அப்போது அஜீத்குமாருக்கு பதிலாக பிரசாந்த் ஹீரோவாக மாற்றப்பட்ட செய்தி தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அஜீத்குமார், நான் திரும்பி வரமாட்டேன் என்று நினைத்துவிட்டீர்களா என்று கேட்டு கண்கலங்கினார்.
உடனே அங்கிருந்த தயாரிப்பாளர், அஜீத்குமார் தான் இந்த படம் பண்றார், படம் எடுத்தாலும் சரி, எடுக்காமல் போனாலும் சரி என்று அஜீத்குமாருக்கு நம்பிக்கை அளித்தார். அஜீத்குமார் மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த பிறகு முதல் சண்டைக் கட்சியை சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் எடுத்த போது, அப்போது ஒரு குழந்தையை போல கவனமாக அவரை நடத்தும்படி மாஸ்டரிடம் கேட்டுக்கொண்டதாக ஆனந்த பூங்காற்றே படத்தின் தயாரிப்பாளர் ரோஜா கம்பெய்ன்ஸ் காஜாமைதீன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.





