தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கும் புகழுக்கும் பெயர் போனவர் நயன்தாரா. ரஜினி அஜித் விஜய் என மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்திருக்கும் அவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நானும் ரவுடிதான் திரைப்படம் நயன்தாராவுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் என்று கூறலாம்.
தனுஷ் தயாரித்த அந்த திரைப்படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னாளில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தங்கள் திருமண வீடியோவை அவர்கள் netflix ஓடிடி தளத்திற்கு ஒரு கணிசமான தொகைக்கு விற்றனர்.
ஆனால் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவரது வீடியோ அந்த ஓடிடி தளத்தில் வெளியாகவே இல்லை. ஒரு நாள் பொங்கி எழுந்த நயன்தாரா இதற்கெல்லாம் தனுஷ் தான் காரணம் என்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தங்களது திருமண வீடியோவில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், ஆனால் அதற்கு தயாரிப்பாளரான தனுஷ் என் ஒ சி சான்றிதழை கொடுக்கவில்லை என்றும் குறை கூறினார்.
மேலும் அவரை கடவுள் பார்த்துக் கொள்வார், ரசிகர்களை தனுஷ் எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் என்றும் கடுமையான சொற்களால் திட்டி இருந்தார். நயன்தாராவின் இந்த பேச்சு பூதாகரமாக வெடித்தது. அவரது திருமண வீடியோவை பப்ளிசிட்டி செய்வதற்காகத்தான் இப்படி பேசுவதாக சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் இது குறித்து தனுஷிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவே இல்லை.
இந்த நிலையில் தனது திருமண வீடியோவில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை வைத்தார் நயன்தாரா. இதனை எதிர்த்து தனுஷ் நீதிமன்றத்தை நாடினார். தனது அனுமதி இல்லாமல் நயன்தாரா சில காட்சிகளை பயன்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில் மற்றொரு தயாரிப்பு நிறுவனமும் நயன்தாராவுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாரா ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும் அவருக்கு எடுத்த எடுப்பிலேயே ரஜினிகாந்த் உடன் ஜோடி சேரும் வாய்ப்பை சந்திரமுகி திரைப்படம் கொடுத்தது. இந்தத் திரைப்படத்தின் காட்சிகளைத் தான் அவர் தனது திருமண வீடியோவில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சந்திரமுகி தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாகவும், நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதே போல் சம்பந்தப்பட்ட ஓடிடி தளத்திற்கும் நோட்டீஸ் சென்று இருப்பதாக சொல்கிறார்கள். இப்படி ஒவ்வொரு திரைப்படத்திலும் காட்சியை அனுமதி வாங்காமல் பயன்படுத்திவிட்டு வெளியே ஏன் நயன்தாரா அடுத்தவரை குறை கூறுகிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.





