தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏ ஆர் முருகதாஸ் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்தார். இதில் சூர்யாவை வைத்து இயக்கிய கஜினி திரைப்படம் ஏ ஆர் முருகதாஸுக்கு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது. இதனை ஹிந்தியில், அமீர் கானை வைத்து ரீமேக் செய்து அங்கும் வெற்றி கொடியை முருகதாஸ் நாட்டினார்.
தொடர்ந்து துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களை ரீமேக் செய்த அவர் தற்போது சல்மான்கானை வைத்து சிக்கந்தர் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதேபோல் தமிழிலிருந்து ஹிந்தியில் வெற்றிக்கொடி நாட்டியவர் அட்லி. அதுவும் ஷாருக் கானை வைத்து ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கி ஆயிரம் கோடி ரூபாய் வசூல் குவித்தார்.
அட்லி ஷாருக்கான் கூட்டணியில் ஜவான் திரைப்படம் வெளியாகி விஸ்வரூப வெற்றியை பெற்றது. இதன் பிறகு தயாரிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் தெறி படத்தின் ரீமேக்கை அங்கு பேபி ஜான் என்னும் பெயரில் தயாரித்தார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் ஹிந்தியில் படுதோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் தற்போது சல்மான் கானை வைத்து அவர் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் கமல்ஹாசன் கௌரவத் தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதே போல் தமிழில் இருந்து சென்ற விஷ்ணுவர்தன் அங்கு ஷெர்ஷா என்னும் திரைப்படத்தை இயக்கி பாராட்டுகளை பெற்றார்.
தற்போது இவர்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். ராக்கி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அவர் இயக்குனராக அறிமுகமானார். ஆக்சன் படங்களை கொடுப்பதில் கெட்டிக்காரரான அவர், தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் ரத்தம் தெறிக்க தெறிக்க அதிரடி காட்சிகளை வைத்திருப்பார்.
இதுவரை அவர் தமிழ் சினிமாவில் ராக்கி, சாணி காகிதம், கேப்டன் மில்லர் ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆனால் இந்த மூன்றுமே வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் இளையராஜா பயோபிக் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் தள்ளிப் போனதால் தற்போது இந்தி திரை உலகுக்கு அவர் செல்கிறார். அவரின் கதைக்கு முக்கியமான தயாரிப்பு நிறுவனமும் ஒப்புக்கொண்டதாக கூறப்படும் நிலையில் திரைக்கதை விவாத பணிகளில் தற்போது இயக்குனர் ஈடுபட்டு வருகிறார்.





