தனுஷ் இயக்கத்தில் நான்காவதாக உருவாகி இருக்கும் திரைப்படம் இட்லி கடை. இதற்கு முன்னதாக அவர் பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில் விமர்சன ரீதியாக பவர் பாண்டி மட்டுமே ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. காதலை வேறு ஒரு பரிணாமத்தில் கூறிய தனுசை அப்போது பாராட்டினார்கள்.
இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் இயக்கி நடித்த படம்தான் ராயன். அதுவும் தனுஷின் ஐம்பதாவது படம். ஆனால் அதில் எந்த ஒரு காரசாரமும் இல்லாமல், வெறுமன அமைந்தது. இருப்பினும் ஏ ஆர் ரகுமானின் இசையால் தப்பிய அந்த திரைப்படம், வசூலில் லாபத்தை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை தனுஷ் இயக்கினார்.
தனது சகோதரி மகனை ஹீரோவாக்கி இளைஞர்களின் காதலை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை எடுத்திருந்தார் தனுஷ். கோல்டன் ஸ்பேரோ எனும் பாடல் அதில் ஹிட் அடித்தது. ஆனால் படம் ஹிட் அடிக்கவில்லை. கலவையான விமர்சனத்தை பெற்ற அந்த படம் தோல்வியடைந்தது. இப்படியான சூழலில்தான் மீண்டும் இயக்கத்தை கையில் எடுத்திருக்கிறார் தனுஷ்.
இந்த முறை அவர் இயக்கி நடித்திருக்கிறார். படத்திற்கு இட்லி கடை என பெயர் வைத்துள்ளார். தனது சொந்த மாவட்டமான தேனியை மையப்படுத்தி இந்த திரைப்படத்தின் கதையை அவர் எழுதியிருக்கிறார். இதில் தனுஷிற்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இது போக ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, பார்த்திபன் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.
இட்லி கடை திரைப்படத்தின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்ததற்கு முக்கிய காரணம், அதில் அருண் விஜய் இடம்பெற்றதுதான். குத்துச்சண்டை வீரராக அதில் அவர் நடித்திருக்கிறார். இது தொடர்பான போஸ்டர், வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கும் அந்த திரைப்படம், வரும் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதற்கான ப்ரொமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, முதலில் அருண் விஜயின் கதாபாத்திரத்தின் பெயர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அது தொடர்பான போஸ்டரில் அருண் விஜய், அஸ்வின் என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் பேக் ட்ராப்பில் துபாய் கட்டடத்தையும் காட்டுகிறார்கள். இதிலிருந்து படம் தேனியில் ஆரம்பித்து துபாய் வரை நீளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.





