நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான படம் புஷ்பா 2. இந்த படம் ரிலீஸான முதல் நாளிலேயே 275 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்தது. தொடர்ந்து 7 நாட்களில் 1006 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம், இதுவரை 1500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்து திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் புஷ்பா 2 பிரிமியர் ஷோ நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அந்த பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணத்தொகையும் தருவதாக அல்லு அர்ஜூன் அறிவித்தார். மேலும், அந்த பெண்ணின் 9 வயது மகனும், பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஐதரபாத் போலீஸார் அனுமதியை மீறி, பிரிமியர் ஷோவுக்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்ததால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்தார் என அவர் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதில் தியேட்டர் உரிமையாளர், மேனேஜர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். கோர்ட் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி விடுதலை செய்தது. எனினும் அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய ஐதராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெண் பலியானதற்கு நடிகர் அல்லு அர்ஜூன்தான் காரணம் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த சூழலில் நடிகர் அல்லு அர்ஜூன் மீது கற்களை வீசி தாக்குதல் நடந்துள்ளது. உஸ்மானிய பல்கலைகழக மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர், கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அங்கிருந்த பூந்தொட்டிகளை தூக்கிப் போட்டு உடைத்தும், அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஐதராபாத் போலீசார் பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கைக்குழு நடவடிக்கையின்படி 8 பேரை கைது செய்து ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அல்லு அர்ஜூன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவதால் அவரது ரசிகர்கள் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர்.





