கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று சொல்வார்கள். அதுபோல் இயக்குனர் பாரதிராஜா கல்லை கூட நடிக்க வைத்து விடுவார் என்று கோலிவுட்டில் ஒரு காலத்தில் பெருமையாக சொல்வார்கள். பாரதிராஜா நடிப்பு சொல்லித் தரும்போது அதில் 10 சதவீதத்தை செய்தாலே பெரிய நடிகராகி விடலாம் என்று அவரது படத்தில் நடித்த பலரும் கூறுவார்கள்.
ஏனென்றால் தமிழ் சினிமாவில் யதார்த்த வாழ்க்கையை முதலில் கொண்டு வந்த ஒரே சிறந்த படைப்பாளி பாரதிராஜா தான். அவர் தந்த தைரியமும் அவர் படங்கள் தந்த ஊக்கமும்தான் இன்று தமிழ் சினிமாவில் யதார்த்த படங்கள் ஜெயிக்க முக்கிய காரணமாக இருக்கின்றன.
திரையில் வெறும் பிம்பங்களையும் ஜம்பங்களையும் காட்டி ரசிகர்களை முட்டாளாக்கிய திரைக்கதைகள் உருவாகி வெளியான அந்த சூழலில் மனிதர்களின் இயல்பான குணங்களை சமுதாயத்தின் யதார்த்தமான போக்கை வாழ்க்கை உண்மைகளை தனது படங்களில் தந்து ரசிகர்களை சிந்திக்க வைத்தவர் இயக்குனர் பாரதிராஜா என்றால் அது மிகையல்ல.
அவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் நடிகைகள் பலர். அவர்களில் ஒருவர் நடிகர் சுதாகர். பாரதிராஜா இயக்கத்தில் உருவான கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிகராக அறிமுகமானார். அடுத்து நிறம் மாறாத பூக்கள் சுவரில்லாத சித்திரங்கள் கவிக்குயில் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடிகர் சுதாகர் நடித்தார். அதன்பிறகு தெலுங்கில் நிறைய படங்களில் நடிகர் சுதாகர் காமெடி ரோலில் நடித்திருக்கிறார்.
இப்போது மிகவும் முதுமையடைந்த நிலையில் அவர் காணப்படுகிறார். இது நடிகர் சுதாகர் தானா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அவரது தோற்றத்தை காலமும் முதுமையும் மாற்றியிருக்கிறது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சுதாகர் இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது, கிழக்கே போகும் ரயில் படம் ஷூட்டிங்கில், எம்ஆர் ராதாவோட மகள் என்று தெரிந்ததும் ராதிகா மேல எனக்கு மரியாதை கலந்த பயம் வந்துடுச்சு.
அப்போ எனக்கு வயசு 18. என் தலை முடி ரொம்ப அடர்த்தியா இருக்கும். அந்தப் படத்துல நிஜமாகவே மொட்டை அடித்து கழுதை மேல ஊர்வலமா கூட்டிட்டு போற சீன் வரும். நான் அதற்காக ரொம்பவும் வருத்தப்பட்டேன். கவலைப்படாத உன்னோட இந்த முதல் படமே ஒரு வருஷம் ஓடும் என்று என்னை பாரதிராஜா சார் ஊக்கப்படுத்தினார். அவர் சொன்ன மாதிரியே கிழக்கே போகும் ரயில் ஒரு வருஷத்துக்கு மேல ஓடி பெரிய ஹிட்டாச்சு என்று நடிகர் சுதாகர் கூறியிருக்கிறார்.





