சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்கள் தேவை என்ற சூழலில் ஆதரவு கேட்டு திமுக கூட்டணி கட்சிகளுக்கு விஜய் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். தவெக கட்சிக்கு காங்கிரஸ் கட்சி தனது 5 எம்எல்ஏக்களை தந்து ஆதரவு தெரிவித்தது.
இதன்மூலம் தவெக கட்சியின் பலம் 112 ஆக உயர்ந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 எம்எல்ஏக்கள் ஆதரவை தந்தது. இதற்காக அந்த அலுவலகங்களுக்கு தவெக தலைவர் விஜய் நேற்றிரவு நேரில் சென்று அந்த கட்சி மாநில நிர்வாகிகளை சந்தித்து நன்றியும் தெரிவித்தார்.
அதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டிருந்தார். ஆனால் அக்கட்சி ஆதரவு தர மறுத்துவிட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது முடிவை இன்னும் அறிவிக்காமல் உள்ளதால் அதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. தற்போது தவெக கட்சியின் பலம் 116 ஆக உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது முடிவை இன்று அறிவிக்க உள்ளது.
கடந்த சில மாதங்களாக திமுக ஆதரவாளர் பிக்பாஸ் ஜூலி தொடர்ந்து தவெக கட்சித் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகிறார். இன்று வெளியிட்ட ஒரு வீடியோவில் பிக்பாஸ் ஜூலி கூறியிருப்பதாவது, ஒரு வழியாக தவெக கட்சிக்கு திமுக தயவால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால் அவர்கள் திமுக கூட்டணியை விட்டு வெளியே வரவில்லை. கூட்டணியில் இருந்து கொண்டுதான் விஜய்க்கு ஆதரவு தருகிறார்கள். ஏன் இந்த ஆதரவு ஏன் தருகிறோம் என்றால் குடியரசு தலைவர் ஆட்சிக்கு தமிழகம் போய்விட்டால் பாஜக ஆட்சி வந்துவிடும் என்கிற ஒரே காரணத்தால் தான். அதனால் நல்லா யோசிச்சு பார்த்துக்கோங்க. எங்களுடைய தயவால் தான் நீங்களும் இப்பொழுது ஆட்சி அமைக்க போறீங்க.
அப்புறம் 6 மாதத்திற்குள் எங்களுக்கு பிடிக்காத சட்டங்களை நிறைவேற்றுவது, மொழி திணிப்பு, மக்களுக்கு எதுவும் அநியாயம் செய்கிற மாதிரி விஷயங்களை நீங்கள் செய்தாலோ, அதுபோல ஏதேனும் கையெழுத்திட்டால் கூட அப்போது நாங்கள் எங்க ஆதரவை திருப்பி வாங்கிக் கொள்வோம்.
நாங்களே ஆட்சியை கவிழ்த்து விடுவோம். அதனால் இனிமேல் மக்களுக்காக இறங்கி வேலை செய்யுங்க. பிரச்னைகள் வந்தால் மக்களுக்காக போராடுங்க என்று ஜூலி கிண்டலாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.





