நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸான படம் வேட்டையன். தசெ ஞானவேல் இயக்கிய இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் படம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்திருக்கிறார். அமிதாப் பச்சன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், ராணா டகுபதி, பகத் பாசில், அபிராமி, ரோகிணி, கிஷோர் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நேற்று இந்த படம் ரிலீஸான நிலையில், ஜெயிலர் போல வேட்டையனுக்கு பெரிய ஓப்பனிங் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று படம் பார்த்த பலரும் குறிப்பாக ரஜினி ரசிகர்களே வேட்டையன் படம் குறித்த பலத்த அதிருப்தியை வெளிப்படுத்தினர். வயதான காலத்தில் ரஜினி கஷ்டப்பட்டு நடித்திருப்பதை பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது. அவர் இந்த படத்தை பார்த்தாரா, இல்லையா என்றுகூட தெரியவில்லை என்று கூறினர். வேட்டையன் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.
இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், வேட்டையன் படம் குறித்து கூறியிருப்பதாவது, குற்றவாளி எங்கிருந்தாலும் அவர்களை தேடிப் பிடித்து கொல்வதுதான் சூப்பர் ஸ்டாருக்கு பிடிக்கும். கோர்ட்டில் ஆஜர்படுத்துவது எல்லாம் அவருக்கு பழக்கமே இல்லாதது. இடைவேளை வரை படம் ஓரளவுக்கு நன்றாக, நேர்க்கோட்டில் போகிறது.
ஆனால் அதற்கு பிறகு படமே வித்யாசமாக மாறி விடுகிறது. படத்தின் 2ம் பாதியில் இதுதான் நடக்கப் போகிறது என்று சர்வசாதாரணமாக நம்மால் யூகிக்க முடிகிறது. இந்த படம், கதையாகவே பல இடங்களில் உறுத்தல்களாக இருக்கிறது. யாராக இருந்தாலும் அவர்களை தனது கொள்கைப்படி என்கவுண்டரில் போட்டுத் தள்ளுபவர்தான் ரஜினிகாந்த்.
கதைப்படி பார்த்தால் பல பேரை சுட்டுக்கொல்லும் அவரும் ஒரு கொலை குற்றவாளிதான். நியாயப்படி பார்த்தால் அவரையே இன்னொரு நல்ல அதிகாரியை வைத்து அவரை என்கவுண்டரில் போட்டு தள்ளியிருக்கணும். அதை செய்யாமல் விட்டு விட்டார்கள். கொலை செய்த ரஜினிகாந்த் பாடம் எடுக்கிறார். அதை அமிதாப் பச்சன் அமர்ந்து வேடிக்கை பார்க்கிறார் என்று வேட்டையன் படம் குறித்து ப்ளு சட்டை மாறன் விமர்சனம் செய்திருக்கிறார்.





