இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. ரஜினிகாந்த்திற்கு வேட்டையன் மற்றும் லால் சலாம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகின்றன. இதே போல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படமும், இந்த ஆண்டு இறுதியிலேயே உருவாகலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல் உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படுகிறது.
விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு அவருக்கு கடந்த ஆண்டு எந்த படங்களும் வெளியாகவில்லை. இப்படியான சூழலில் தான் அவருக்கு இந்த ஆண்டு இந்தியன் 2 வருகிறது. இதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக்லைப் திரைப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியிருப்பதால், அதுவும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி விஜய்க்கு கோட் படம் இந்த ஆண்டு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதே போல் அஜித்திற்கு விடாமுயற்சி திரைப்படம், இந்த ஆண்டிலேயே வெளியாகிறது. இதனிடையே நடப்பாண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிவகார்த்திகேயனுக்கு அயலான், தனுஷிற்கு கேப்டன் மில்லர் மற்றும் அருண் விஜய்க்கு மிஷன் சாப்டர் ஒன்று ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.
இதில் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்றன. இருப்பினும் வசூல் ரீதியாக இந்த இரண்டு திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் யாருமே எதிர்பார்க்காத வகையில் அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் ஒன்று திரைப்படமும் நல்ல விமர்சனத்தை பெற்றது. அதை இயக்குனர் ஏ எல் விஜய்க்கு இந்த திரைப்படம் நீண்ட நாள் பிறகு ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை தொடர்ந்து எந்த திரைப்படங்களும் வெளியாகாத நிலையில், தற்போது குடியரசு தின விடுமுறையில் முக்கியமான இரண்டு திரைப்படங்கள் வெளியாகின்றன. இதெல்லாம் முதலில் பார்க்கப் போவது ப்ளூ ஸ்டார் திரைப்படம். பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த ஜெயக்குமார் தான் இதன் இயக்குனர். இதில் அசோக் செல்வன், அவரது மனைவி கீர்த்தி பாண்டியன், பாக்யராஜ் மகன் சாந்தனு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான ரயிலின் ஓலிகள் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. அரக்கோணம் சுற்றுவட்டார பகுதியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் கவனம் பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது.
இதேபோல் நடிகர் ஆர் ஜே பாலாஜிக்கு சிங்கப்பூர் சலூன் திரைப்படமும் நாளை வெளியாகிறது. எல் கே ஜி, மூக்குத்தி அம்மன் என குறிப்பிடத்தக்க வெற்றிகளை கொடுத்த பாலாஜிக்கு இந்த படம் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. இதனை கோகுல் இயக்கியுள்ளார். ட்ரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனதால் படத்திற்கு சற்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் தூக்குத் துரை என்னும் காமெடி திரைப்படமும் நாளை வெளியாகிறது. மலையாளத்தில் உச்ச நட்சத்திரமான மோகன்லால் நடிப்பில் உருவாகி இருக்கும் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் நாளை வெளியாகிறது.





