நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் டிடிடி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி கார்த்தி நடித்த வா வாத்தியார் பொங்கலுக்கு வந்த நிலையில் அந்த படங்கள் ரசிகர்களிடம் போதிய ஆதரவை வரவேற்பை பெறாமல் கடும் விமர்சனங்களை சந்தித்தன.
ஆனால் சத்தமே இல்லாமல் திரைக்கு வந்த நடிகர் ஜீவாவின் டிடிடி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் ஒரு வீட்டில் நடக்கும் திருமண சடங்கு பக்கத்து வீட்டில் நடக்கும் இறுதி சடங்கு என்ற இரு மாறுப்பட்ட விஷயங்களை மையப்படுத்தி காமெடி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டு இருந்தது.
மலையாளத்தில் பாலிமி படத்தை இயக்கிய இயக்குனர் நிதிஷ் சஹதேவ் தமிழில் இயக்கிய முதல் படம் இது. டிடிடி படத்தில் ஹீரோவாக மட்டுமின்றி கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் நடிகர் ஜீவா இந்த படத்தின் வாயிலாக சூப்பர் கம்பேக் தந்திருக்கிறார்.
அதே போல் பழைய வண்ணாரப்பேட்டை பகாசூரன் திரௌபதி படங்களை இயக்கிய மோகன்ஜி இயக்கத்தில் வெளிவந்த படம் திரௌபதி 2 படம். 14ம் நூற்றாண்டு கதைக்களத்தில் வரலாற்று பின்னணியில் மன்னர் காலத்து படமாக இது வெளியாகி உள்ளது. மறைக்கப்பட்ட சரித்திர சம்பவங்களை சொல்லும் இந்த படம் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை.
அதே நேரத்தில் நடிகர் அஜீத்குமாரின் 50வது படம் மங்காத்தா இப்போது ரி ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் ஓடி வருகிறது. குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு ரி ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தை அஜீத்குமார் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கடந்த 15ம் தேதி வெளியான டிடிடி படம் இதுவரை 34 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. மேலும் இந்த படம் இந்தியில் ரீ மேக் செய்யப்பட உள்ளது. கடந்த 23ம் தேதி வெளியான திரௌபதி படம் 3 நாட்களில் ரூ. 2 கோடி வரை தான் வசூல் செய்துள்ளது. அதே 23ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட்ட மங்காத்தா படம் 3 நாட்களில் ரூ. 14 கோடி வரை வசூலை அள்ளியுள்ளது. மங்காத்தா படம் ரி ரிலீஸ் காரணமாக திரௌபதி 2 படத்தின் வசூல் பாதித்துவிட்டது என்று இயக்குனர் மோகன்ஜி வீடியோ வெளியிட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.





