நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் தசெ ஞானவேல் தனது அடுத்த படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். சரவணபவன் ஓட்டல் நிறுவனர் ராஜகோபால் வாழ்க்கை வரலாறு படத்தை உருவாக்க பல ஆண்டுகளாக அவர் முயற்சித்து வருகிறார். இதில் பல சவால்கள் இருந்ததால் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தன.
இப்போது சரவணபவன் ராஜகோபால் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க பிரபல நடிகர் சம்மதம் தெரிவித்த நிலையில் இந்த படத்தின் அதிகாரப் பூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. கன்னட இயக்குனர் ஹேமந்த் ராவ் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் 7 மொழிகளில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடியில் ஒரு கிராமத்தில் வெங்காய விவசாயிக்கு மகனாக பிறந்தவர் பிச்சை ராஜகோபால். கடந்த 1973ம் ஆண்டு சென்னைக்கு வந்து ஒரு சிறிய மளிகை கடையை அவர் தொடங்கினார். நெருப்பு சம்பந்தப்பட்ட ஒரு தொழிலை தொடங்கும்படி ஜோசியர் ஒருவர் கூறியதால், 1981ம் ஆண்டு சரவணபவன் என்கிற சைவ உணவகத்தை ராஜகோபால் ஆரம்பித்தார். குறைவான விலையில் தரமான உணவு என்ற கொள்கையை கடைசி வரை அவர் கடைபிடித்தார்.
மேலும் தனது உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மருத்துவ காப்பீடு வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை செய்து கொடுத்ததால் மக்களால் அண்ணாச்சி என அழைக்கப்பட்டார். ஒரு சிறு ஓட்டலாக தொடங்கி 2019ம் ஆண்டில் 22 நாடுகளில் 111 கடைகளை உருவாக்கினார். இதன் மொத்த சொத்து மதிப்பு ரூ. 3000 கோடி ஆகும்.
சிறந்த மனிதராக வாழ்க்கையில் உயர்ந்து காட்டிய ராஜகோபால் மற்றொரு புறம் இருண்ட பக்கமாக இருந்தது. ஜோதிடத்தின் மேல் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த ராஜகோபால் தனது தொழில் ரீதியான எல்லா முடிவுகளையும் ஜோதிடத்தில் அடிப்படையில் எடுத்தார். அதே ஜோதிடத்திற்கு கட்டுப்பட்டு தனது உதவி மேலாளரின் மகள் ஜீவஜோதியை 3வது திருமணம் செய்து கொண்டால் உலகத்தில் மிகப்பெரிய செல்வந்தராக விடலாம் என்றும் நம்பினார்.
ஏற்கனவே பிரின்ஸ் சாந்தகுமார் என்பவருடன் திருமணமனவர் ஜீவஜோதி என்ற நிலையில் அவரது குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்தார். 2001ம் ஆண்டில் ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கொலை செய்ததற்காக ராஜகோபாலுக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. தண்டனையை குறைக்க ராஜகோபால் மனுதாக்கல் செய்தபோது அவருக்கு உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. சிறை செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு ராஜகோபால் அண்ணாச்சி மறைந்தார். இப்போது அவரது பயோபிக் திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்தில் நாயகனாக மலையாள நடிகர் மோகன்லால் நடித்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





