பண்டிகை நாட்களில் ரசிகர்கள் எப்போதுமே மிகப்பெரிய நட்சத்திரங்களில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதையே விரும்புவார்கள். அப்படி படங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றால் அது பண்டிகை போல் இருக்காது என்பதும் ரசிகர்களின் கருத்தாக இங்கு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளிக்கு ரசிகர்கள் விரும்பியமாறு ரஜினி கமல் அஜித் விஜய் போன்ற பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தி நடிப்பில் சர்தார் திரைப்படமும், சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் திரைப்படமும் வெளியாகி இருந்தன. கடந்த தீபாவளிக்கு கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் வெளியானது. இப்படியான சூழலில் வரும் பொங்கலுக்கு, தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டன.
இரண்டு திரைப்படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக அயலான் திரைப்படத்தை அதிக பேர் எதிர்பார்க்கிறார்கள் என்றே கூறலாம். காரணம் அந்தப் படத்தின் கதை தான். இன்று நேற்று நாளை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவிக்குமார்தான், அயலான் திரைப்படத்தை எடுத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு இதன் பணிகள் தொடங்கிய நிலையில், சூட்டிங் பணிகள் நிறைவடைந்து பொருளாதாரப் பிரச்சினையால் படம் முடங்கியது. கிட்டத்தட்ட ஐந்தரை வருடங்களுக்குப் பிறகு தற்போது அயலான் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. படத்தில் ஏலியன் தொடர்பான காட்சிகள் இருப்பதால், ரசிகர்களுக்கு இது வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே குடும்ப ஆடியன்ஸ்கள் இருப்பதால், இந்த படம் நிச்சயம் கல்லாக்கட்டும் என்று கூறப்படுகிறது.
இதேபோல் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராக்கி சாணிக்காயிதம் ஆகிய திரைப்படங்களை எடுத்த அருண் மாதேஸ்வரன்தான் இந்த திரைப்படத்தின் இயக்குனர். இரண்டு திரைப்படங்களும் அவருக்கு பெரியதாக ஓடவில்லை என்றாலும், இளைஞர்கள் மத்தியில் அருண் மாதேஸ்வரன் பேசப்பட்டார். படத்தில் தனுஷ் கெட்டப்பும் மிரட்டலாக இருப்பதால் ரசிகர்கள் கேப்டன் மில்லருக்காக காத்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு திரைப்படங்களும் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கிலும் இருவருக்கும் ஓரளவு மார்க்கெட் இருப்பதால் அந்த தேதியிலேயே படம் அங்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் உட்பட நான்கு முக்கிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இதன் காரணமாக கேப்டன் மில்லர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்களும், சொன்ன தேதியில் அங்கு ரிலீஸ் ஆவது கடினம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த இரண்டு திரைப்படங்களும் தெலுங்கு ரிலீஸில் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





