சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜெய் பீம் திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஞானவேல் இதனை இயக்கி இருக்கிறார்.
இதன் போஸ்ட் ப்ரடக்சன் படிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். காவல்துறை பின்னணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார் ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் உடன் கூலி, நெல்சனுடன் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என ரஜினி கமிட்டாக இருக்கிறார்.
இதில் அடுத்ததாக கூலி திரைப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தங்கக் கடத்தலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதில் ரஜினிகாந்த்துக்கு நெகட்டிவ் ரோல் என்றும் கூறப்படுகிறது.
கூலி திரைப்படம் குறித்து ஏற்கனவே பேசியிருந்த லோகேஷ் கனகராஜ், தனக்கு இது ஒரு பரிசோதனை படமாக இருக்கும் என்று தெரிவித்தார். இதுவரை மேற்கொள்ளாத முயற்சியே இதில் எடுத்திருப்பதாகவும், இது எல் சி யு வில் வராது என்றும் அவர் தெளிவுபடுத்தி இருந்தார். ஜூன் அல்லது ஜூலை மாதம் இந்த திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கூலி படத்தில் சத்யராஜ் நடிக்கப் போவதாக தகவல் வெளியாக இருக்கிறது. ரஜினிகாந்தின் நண்பர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க போகிறாராம். இவர்கள் இருவரும் இணைந்து கடைசியாக மிஸ்டர் பாரத் படத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர்கள் இணைகின்றனர். ஏற்கனவே சிவாஜி படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு சத்யராஜ்ஜைதான் சங்கர் தேர்வு செய்திருந்தார். ஆனால் அதில் சத்யராஜ் நடிக்க மறுத்து விட்டார். இப்படியான சூழ்நிலையில் இருவரும் தற்போது இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.





