விஜயகாந்த், தமிழ் சினிமாவில் மிக முக்கிய முன்னணி நடிகராக விளங்கியவர். ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக இருந்தார். 1980, 90களில் விஜயகாந்த் நடித்த பல படங்கள் மிகப் பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த் சினிமாவில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் அவர் ஹீரோவாக இருந்தார். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு, தனது பிறந்த நாளில் நிறைய உதவிகளை செய்தார். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது, சங்கத்தின் கடனை அடைக்க பாடுபட்டு வெற்றிக் கண்டார்.
சினிமாவில் பல சாதனைகளை புரிந்த விஜயகாந்த், 2005 ஆம் ஆண்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கினார். தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில், திமுகவை விட அதிக தொகுதிகளில் வென்று, ஜெயலலிதா ஆட்சியில், எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்தார். தொடர்ந்து அரசியல் பயணத்தில் ஏறுமுகத்தில் இருந்த விஜயகாந்த், ஒரு கட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வந்தனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்ட வந்த விஜயகாந்த், ஒரு கட்டத்தில் செயல்பட முடியாத அளவுக்கு முடங்கிப் போய், வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார். அமெரிக்கா சிங்கப்பூர் லண்டன் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அவரை அழைத்துச் சென்று மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அவர் உடல் நலம் பழைய நிலைக்கு திரும்பவில்லை.
7 ஆண்டுகளாக, நாளுக்கு நாள் அவர் உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணை விட்டு மறைந்தார். 150 க்கும் மேற்பட்ட படங்களில் விஜயகாந்த் பெரும்பாலும் போலீஸ் கதாபாத்திரங்களில், அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இவர் ஒருவர் மட்டுமே தமிழில் மட்டுமே நடித்த ஒரே நடிகர் என்ற பெருமைக்குரியவர். விஜயகாந்த் கடைசிவரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் நினைவிடத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அங்கு மதிய வேளையில் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில், கடந்த 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதையடுத்து விஜயகாந்த் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட் சார்பில், உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச் சின்னமாக விஜயகாந்த் நினைவுச்சின்னம் போற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி மறைவுக்குப் பிறகும் தனது நினைவிடத்தில் உலக சாதனை புரியும் அளவுக்கு கேப்டனின் நல்ல குணமும், அவர் வாழ்ந்த வாழ்க்கையும், மனிதநேயமும் இதன் அடையாளமாக இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சிடைந்து வருகின்றனர்.





