தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. கட்சித் தலைவரான நடிகர் விஜய் படத்தும் இந்த முதல் அரசியல் மாநாடு, தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்துக்கு பிறகு, நடிகர் விஜய்க்கு தமிழக மக்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு இருப்பதை இந்த மாநாட்டில் திரண்டு வரும் மக்கள் கூட்டம் பிரதிபலிக்கிறது.
இன்று மாலை 4 மணிக்கு தான் மாநாடு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மதியம் முதலே அந்தந்த மாவட்டங்களில் இருந்து தவெக கட்சியினரும், விஜய் ரசிகர்களும், கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் விக்கிரவாண்டி நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர். டூவீலர்களில் கார்களில் பஸ்களில் வேன்களில் லாரிகளில் என பல ஆயிரம் பேர் நேற்றிரவு முதல் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று இரவு முதல் மாநாட்டு பந்தல் பகுதியில் மக்கள் கூட்டம் திரள ஆரம்பித்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மாநாட்டு திடல் பகுதிக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் நுழைந்தனர். நடிகர் விஜயை முன்னால் அருகில் இருந்து பார்க்க வேண்டும், அவர் பேசுவதை முன்னால் இருந்து கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பெரும்பாலான மக்கள் மாநாட்டுக்கு வந்துள்ளனர்.
அதனால் மேடைக்கு முன்புறமுள்ள பகுதியில் சென்று பல ஆயிரம் பேர் அமர்ந்து கொண்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்குள் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகளில் மக்கள் அமர்ந்து விட்டனர். மேலும் கடுமையான வெயில் காரணமாக, அருகில் இருந்த இருக்கைகளை தலைக்கு மேல் தூக்கி குடை போல் பிடித்துபடியும் பலரும் அமர்ந்துள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இதுவரை 10க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயக்கம் அடைந்த நிலையில், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மாநாட்டு திடல் பகுதியில் விஜய் நடக்கும் 800 அடி ராம்ப் வாக் பகுதியில் இடம்பிடிக்க மக்கள் மத்தியில் கடும் போட்டி நிலவிய நிலையில், கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது. 4 இடங்களில் பார்க்கிங் பகுதி அமைக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டாலும், மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ரோடுகளில் முக்கிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்த போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
கடும் வெயில் காரணமாக மக்கள் அவதிப்படுவதால், மாலை 4 மணி துவங்க வேண்டிய மாநாட்டை அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக, பிற்பகல் 3 மணிக்கே மாநாட்டை துவங்க தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும் பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாநாடு துவங்கும் வரை மக்கள் அமைதி காக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சி மாநாடு போல் இல்லாமல், திருவிழா கூட்டம் போல் மக்கள் தொடர்ந்து விசாலை பகுதியில் குவிவதால் அந்த பகுதியில் ஆரவாரம், உற்சாகம் அதிகரித்து வருகிறது.





