தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. ஒரு கல் ஒரு கண்ணாடி வேலாயுதம் போகன் அரண்மனை அரண்மனை எங்கேயும் காதல் புலி ஆம்பள அரண்மனை 2 ரோமியோ ஜூலியட் மான் கராத்தே மாப்பிள்ளை என பல படங்களில் நடித்திருந்தார்.
சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபர் சோஹைல் கதூரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா மோத்வானி, சமீபத்தில் தான் அவரிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றார். அதற்கு முன்பே ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானி, தனது மனைவி முஸ்கான் நான்சியிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
முஸ்கான் நான்சி இந்தி தொலைக்காட்சி நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரசாந்த் மோத்வானிக்கும் முஸ்கான் நான்சிக்கும் இடையே மோதல் நடந்த போது, தனது கணவர் மீதும் ஹன்சிகா மீதும் அவர் புகார் கொடுத்தார். இதில் தனது கணவர் அவரது சகோதரி ஹன்சிகா தாயார் ஜோதி மோத்வானி ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், பாலியல் ரீதியாக சித்திரவதை செய்தனர் என்றும் கூறியிருந்தார்.
இதனால் தனக்கு முகவாத நோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அந்த புகாரில் முஸ்கான் நான்சி கூறியிருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஹன்சிகா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முஸ்கான் நான்சி கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஹன்சிகா மோத்வானி தனது அண்ணி மீது 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மும்பை திண்டோஷி செஷன் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது அண்ணனுக்கும் நான்சிக்கும் திருமணம் நடந்தபோது நான்சிக்கு 27 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்தேன். அந்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதற்காகவே என் மீது நான்சி பொய்யான புகார்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து கூறுகிறார். நான் அவர்களுடன் வசிக்காத நிலையில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரம் அற்றவை.
எனவே எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு அவர் 2 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன் இனிமேல் எனக்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் அவர் பேசக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியிருக்கிறார்.





