தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிறுத்தை சிவா. நடிகர் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை சிவா இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து அவர் சிறுத்தை சிவா என அழைக்கப்பட்டார். தொடர்ந்து அஜீத்குமார் நடிப்பில் வீரம் விஸ்வாசம் விவேகம் வேதாளம் ஆகிய படங்களை இயக்கினார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த, சூர்யா நடித்த கங்குவா படங்களையும் இயக்கினார்.
இதில் அஜீத்குமார் தமன்னா நடித்த வீரம், அஜீத்குமார் நயன்தாரா நடித்த விஸ்வாசம் அஜீத்குமார் ஸ்ருதிஹாசன் லட்சுமி மேனன் நடித்த வேதாளம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக சிறுத்தை சிவாவுக்கு அமைந்தது. ரஜினிகாந்த் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் நடித்த அண்ணாத்த படமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற படம்தான்.
ஆனால் சிறுத்தை சிவா இயக்கிய விவேகம் படம் சரியாக போகவில்லை. அதே போல் சூர்யா நடித்த கங்குவா படமும் மாபெரும் தோல்வியை சந்தித்த படமாக இருந்தது. கங்குவா படம் வெளியான பிறகு இதுவரை சிறுத்தை சிவாவுக்கு அடுத்த படம் இயக்கும் வாய்ப்பை எந்த தயாரிப்பாளரும், நடிகரும் தர முன்வரவில்லை.
இந்த சூழலில் சிறுத்தை சிவா செய்திருக்கும் ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சிறுத்தை சிவாவுக்கு சென்னையில் சொந்தமாக ஸ்டுடியோ மற்றும் சொத்துகள் இருக்கின்றன. அவருக்கு சென்னை அண்ணா நகரில் வாடகைக்கு பிடிக்கப்பட்ட அலுவலகமும் இருந்துள்ளது.
வீரம் படம் உருவான போது அந்த ஆபீஸை வாடகைக்கு பிடித்த இயக்குனர் சிறுத்தை சிவா, கங்குவா படம் வெளியாகும் வரை அந்த அலுவலகத்தில் இருந்து தான் தனது படங்கள் இயக்கம் பணிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். இப்போது திடீரென அந்த அண்ணா நகர் அலுவலகத்தை சிறுத்தை சிவா காலி செய்திருக்கிறார். வேறு இடத்தில் ஆபீஸ் அமைக்க இடம் தேடி வருகிறார்.
இதற்கு காரணம் என்னவென்றால், அந்த அலுவலகம் ராசி இல்லை. அண்ணாத்த கங்குவா படங்கள் சரியாக போகவில்லை என்று அவர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் வீரம் விஸ்வாசம் வேதாளம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்த போதும் அதே அலுவலகத்தை தான் சிறுத்தை சிவா பயன்படுத்தி இருக்கிறார். படம் தோல்வி அடைந்தால், ஆபீஸ் என்ன செய்யும், என்ன ப்ரோ இது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





