தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி ஆகியோர் உள்ளனர். இவர்கள் சங்க நிர்வாகிகளாக பொறுப்பேற்றதில் இருந்தே பல விமர்சனங்களுக்கு, நடிகர் சங்கம் ஆளாகி வருகிறது.
குறிப்பாக துணை நடிகர்கள், சின்ன நடிகர்கள் வறுமையில் வாடுகின்றனர். அவர்கள் நோய்வாய்பட்டால், மருத்துவ சிகிச்சைகளுக்கு சங்கம் தரப்பில் உதவுவதில்லை. இறந்தால் சங்கம் தரப்பில் எந்த நிதியுதவியும் செய்வதும் இல்லை. இறுதி அஞ்சலி செலுத்தவும் சங்க நிர்வாகிகள் வருவதில்லை.
சாதாரண நடிகர்களுக்கு மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் சிகரமாக ஒரு காலகட்டத்தில் பெயர் எடுத்த கேப்டன் விஜயகாந்துக்கும் நடிகர் சங்கம் அந்த அவமரியாதையே செய்தது. கார்த்தி, விஷால் போன்றவர்கள் வெளிநாட்டில் இருந்துக்கொண்டு, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூட நேரில் வரவில்லை.
இதற்கிடையே நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நடிகர் கமலை தவிர பெரிய நடிகர் யாரும் வரவில்லை. சொற்பமான கூட்டத்தில், மிக சாதாரணமாக இந்த கூட்டம் நடந்து முடிந்தது. விஜயகாந்த் புகைப்படத்தை பெரியதாக வைத்து மாலை போட்டு, மெழுகுவர்த்தி ஏத்தி, சிலர் பேசியதுடன் அது முடிவடைந்துவிட்டத.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர், வலைப்பேச்சு அந்தணன் மிக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், அஜீத், தனுஷ் போன்றவர்கள் வந்திருக்க வேண்டும். வரவில்லை. விஜயகாந்துக்கு எப்படி மரியாதை செய்ய வேண்டும் என்று தெரியாதவர்கள் நடத்திய ஒரு கூட்டமாகவே இது நடந்தது. நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்காக அவரை கவுரவிக்கும் விதமாக ஒரு நினைவு பாடல் வெளியிட்டு இருக்கலாம். எத்தனைேயா இசையமைப்பாளர்கள் உள்ளனர். கேட்டிருந்தால் உடனே செய்து கொடுத்திருப்பர்.
நினைவேந்தல் கூட்டத்துக்கு வராதவர்கள் மீது நடிகர் சங்கம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தால், அனைவரும் அந்த கூட்டத்திற்கு வந்திருப்பார்கள். மிக சுமாரான நடந்த ஒரு நினைவேந்தல் கூட்டமாக போய்விட்டது. இது, புகழ்வாய்ந்த ஒரு பெரிய பண்பாளரை, நடிகர் விஜயகாந்தை அவமதிக்க நடத்தப்பட்ட கூட்டம்போல் தான் இருந்தது. இதற்கு இந்த கூட்டத்தை நடத்தாமல் தவிர்த்திருக்கலாம். இதனால் நடிகர் சங்கத்துக்கு தீராத கறைதான் ஏற்பட்டுள்ளது, என குற்றம் சாட்டியுள்ளார் அந்தணன்.





