நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறார்.
அதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து தனது கட்சிக்கு ஆதரவு திரட்டவும், கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் தனது கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளை மக்களிடம் நேரில் தெரிவிக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.
இன்று உலகம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து, பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில் நடிகர் விஜய் கூறியிருப்பதாவது, பொங்கல் திருநாள், உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தில் ஒப்பற்ற கொண்டாட்ட திருநாள். கால்நடைகள் நன்மதிப்பு பெறும் நன்றி திருநாள். காளைகள் திமில் நிமிர்த்தி களம் காணும் வீரத்திருநாள்.
2026ல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக மகிழ்ச்சி நிலைபெற நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற அதற்கான முன்னோட்டமாய் 2025ம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றி பொங்கல்.
இந்த தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர் உறுதி ஏற்போம்; அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று அதில் விஜய் தெரிவித்துள்ளார். இதில் நடிகர் விஜய் பொங்கல் வாழ்த்துகளுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார். அதுதான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
காலம் காலமாக சித்திரை முதல் நாள்தான் தமிழர்கள் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு. திமுக ஆட்சி காலத்தில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவித்தனர். அதை பெரும்பாலான மக்கள் ஏற்கவில்லை. இப்போதும் சித்திரை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இதில் திமுக சொன்ன தை முதல் நாளை கருத்தில் கொண்டு விஜய், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தது தவறு என பலரும் விமர்சித்து வருகின்றனர்.





