நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில் கடுமையான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.
இந்த படத்தில் 37 ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் ரஜினியின் நண்பராக நடித்திருக்கிறார். சத்யராஜ் கொல்லப்படுவதால் தான் தன் நண்பனை கொன்றவர்களை பழிவாங்கவே ரஜினி கதைக்குள் வருகிறார். தொடர்ந்து நடக்கும் திரைக்கதை சம்பவங்களில் பலவிதமான லாஜிக் தவறுகள் இருப்பதாக ரசிகர்களிடையே விமர்சனம் எழுந்தது.
குறிப்பாக ரஜினியின் மகள் ஸ்ருதிஹாசனை சத்யராஜ் ஏன் வளர்க்கிறார், கடைசி வரை ரஜினி நீதான் என் மகள் என்று ஸ்ருதிஹாசனிடம் சொல்லாமல் ஏன் மறைக்கிறார், 30 ஆண்டுகள் ஏன் ரஜினி ஆப்லைனில் இருக்கிறார், சாதாரண கூலி ரஜினிக்கு சொந்தமாக எப்படி மேன்சன் வந்தது என பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்புகின்றனர்.
அத்துடன் விலங்குகளை எரிக்கும் நோக்கத்தில் சாதனம் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் சத்யராஜ், அது ஏன் மனிதர்கள் அமரும் கைபிடியுள்ள மின்சார நாற்காலியாக அதை தயாரித்தார் என பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் கூலி படம் தியேட்டர்களில் நல்ல வசூலில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
முதல் நாளில் 151 கோடி ரூபாய், 2வது நாளில் 230 கோடி ரூபாய், 3வது நாளில் 310 கோடி ரூபாய் என தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த கூலி படத்தின் உலக அளவிலான வசூல் நிலவரம் 4 நாட்களில் எவ்வளவு என்பதை அந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி கடந்த 14ம் தேதி வெளியான கூலி படம் 4 நாட்களில் மொத்தம் 404 கோடி ரூபாய் வசூலை எட்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ் படம் இதுதான் என்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் அந்த அறிவிப்பில் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளது. எதிர்மறை விமர்சனங்களை கடந்தும் ரஜினி நடித்த கூலி வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது.





