நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் இப்போது தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கிறார். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்திருக்கிறார். கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படம் சரியாக போகவில்லை.
கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து தோல்வி படங்களை நடிகர் விஷால் தந்து வரும் நிலையில், மார்க் ஆண்டனி படம்தான் அவருக்கு கம்பேக் படமாக இருந்தது. ஆனால் ரத்னம் படம் மீண்டும் தோல்வியை தந்துவிட்டது. விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் விஷால் பல படங்களை தயாரித்திருக்கிறார். இதில் பலத்த நஷ்டத்தையும் அவர் சந்தித்து இருக்கிறார்.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் ரூ. 21 கோடியே 29 லட்சம் கடனாக கடந்த 2020ம் ஆண்டில் வாங்கியிருக்கிறார். அந்த கடனை அவர் திருப்பி தராத நிலையில், லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் அந்த கடன் தொகையை மொத்தமாக பைனான்சியர் அன்புச்செழியனிடம் வழங்கியது.
இதற்கு பதிலாக நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் படங்களின் உரிமைகளை லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க ஒப்பந்தம் செய்தது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி நடிகர் விஷால், வீரமே வாகை சூடும் படத்தை அவரே வெளியிட்டார். இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டில் நடிகர் விஷால் மீது லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், நடிகர் விஷால் லைகா நிறுவனத்துக்கு தர வேண்டிய ரூ. 21 கோடியே 29 லட்சத்தை 30 சதவீத வட்டியுடன் செலுத்த உத்தரவிட்டது. அதன்படி 30 சதவீத வட்டியில் ஆண்டுக்கு 6 கோடி வீதம் 4 ஆண்டுகளுக்கு 24 கோடி ரூபாய், கடன்தொகை 21.29 கோடி ரூபாய் என்ற நிலையில் கோர்ட் உத்தரவின்படி 45 கோடி ரூபாய்க்கு மேல் விஷால், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்.
நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் என்ற நிலையில், கோர்ட் உத்தரவுபடி அந்த கடன் தொகையை வட்டியுடன் ரூ. 45 கோடியை செலுத்துவாரா, அல்லது மேல் முறையீடு செய்வாரா என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது. ஏற்கனவே விஷால் 4 ஆண்டுகளாக லைகா நிறுவனத்துக்கு வாங்கிய கடனை தராமல், ஒப்பந்தத்தை மீறிய நிலையில் கோர்ட் உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.





