தமிழ் சினிமாவில் நடிகராக பாடகராக தயாரிப்பாளராக அசத்தி கொண்டிருக்கும் தனுஷ் இப்போது டைரக்டராகவும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை, பாராட்டை வாழ்த்துகளை பெற்று வருகிறார். தனுஷ் முதன் முறையாக இயக்கிய படம் ப பாண்டி. ராஜ்கிரண் ரேவதி பிரசன்னா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் முதியோர் காதலை மையப்படுத்தி இருந்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதன்பிறகு தனுஷ் நடித்த அவரது 50வது படம் ராயன். அந்த படத்தை தனுஷ் டைரக்ட் செய்து நடித்திருந்தார். இந்த படத்தில் சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் துஷாரா விஜயன் அபர்ணா பாலமுரளி செல்வராகவன் பிரகாஷ்ராஜ் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்தனர். படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 155 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. துவக்கத்தில் வன்முறை படம் என்று விமர்சிக்கப்பட்ட ராயன் படம் அதன் பிறகு நெகடிவ் விமர்சனங்களை எல்லாம் அடித்து நொறுக்கி மிகப்பெரிய வெற்றி படமாக நடிகர் தனுஷூக்கு அமைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் இட்லி கடை என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி திண்டுக்கல் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டு அடுத்ததாக ஜப்பானில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே நடிகர் தனுஷ் இயக்கிய மற்றொரு படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் நாயகியாக அனைகா சுரேந்தர் நடித்துள்ளார். மேலும் மேத்யூ தாமஸ் பிரியா பிரகாஷ் வாரியர் சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. வரும் 2025 ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக் குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்த நாளில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் மற்றும் ஒன்ஸ்மோர் ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தில் காதலை மையப்படுத்திய தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.





