தனுஷ் நடிப்பில் கடந்த இருபதாம் தேதி குபேரா திரைப்படம் வெளியானது. இது நேரடி தெலுங்கு திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே சார் என்னும் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் தனுஷ் நடித்திருந்தார். இது தமிழில் வாத்தி எனும் பெயரில் வெளியாகி இருந்தது. அண்மையில் துல்கர் சல்மான் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற லக்கி பாஸ்கர் படத்தில் இயக்குனர் வெங்கி அட்லூரிதான் இதனை எடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தான் தனுசுக்கு இரண்டாவது நேரடி தெலுங்கு திரைப்படமாக குபேரா வந்திருக்கிறது. சேகர் கமுலா இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மும்பையில் மையமாக வைத்து இந்த கதை எழுதப்பட்டுள்ளது.
பிச்சைக்காரர்களின் வாழ்க்கையையும் எதார்த்தமாக காட்டி பாராட்டைப் பெற்றிருக்கிறார் இயக்குனர் சேகர் கமுலா. குறிப்பாக அந்த வேடத்தில் மிகச் சரியாக நடித்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார் தனுஷ். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை குறிப்பிட்டு காட்சிகள் நகர, அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார் தனுஷ்.
இந்த திரைப்படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதியில் ஓரளவு சுமாராக இருப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும் சூழலில், முதல் நாள் மட்டும் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவில் குபேரா திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இப்படியான சூழலில் ஹைதராபாத்தில் நடைபெற்ற அதன் வெற்றி விழாவில், நடிகர்கள் தனுஷ் நாகர்ஜுனா ராஷ்மிகா மந்தனா இயக்குனர் சேகர் கமுலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், குபேரா திரைப்படத்தில் தேவா கதாபாத்திரத்தில் நடிக்க இந்தியாவிலேயே பொருத்தமான ஒரே ஒரு நடிகர் தனுஷ் மட்டும்தான் என புகழாரம் சூட்டினார்.
பின்னர் பேசிய தனுஷ், இன்று ஆக்ஷனும் ரத்தமும் அதிகமான திரைப்படங்கள் தான் ஓடும் என்ற ஒரு கட்டுக்கதை உள்ளது. ஆனால் மனித உணர்வுகளுக்கு குபேரா திரைப்படம் நம்பிக்கை அளித்தது. இதே போல் எளிய முறையில் எடுக்கப்பட்ட டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்த்தது. வெற்றி கிடைக்கும் போது குறைவாக பேசி என்று எனது தாயார் கூறுவார் அதனால் நீங்கள் நான் அதிகம் பேசப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.





