தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் அடுத்ததாக “கேப்டன் மில்லர்” படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். கோலிவுட்டில் தனது மிகச் சிறப்பான நடிப்பால் தற்போது முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழும் தனுஷ் ஏற்கனவே பாலிவுட், ஹாலிவுட் என தனது அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.

அதன் காரணமாக தனுஷின் கரியர் தற்போது உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மறைந்த நடிகர் ரகுவரன் குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ் பேசிய சில விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் ரகுவரன் சாருக்கு டெடிகேட் செய்யத்தான் வேலையில்லா பட்டதாரி படத்தில் கதாநாயகனுக்கு ரகுவரன் என்ற பெயரை வைத்ததாக தனுஷ் கூறியுள்ளார். மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : வேலையில்லா பட்டதாரி படத்திற்கு முதலில் “ரகுவரன்” என்கிற டைட்டில் தான் வைக்க நினைத்தோம்.

ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போக அந்த படத்தின் கதாநாயகனுக்கு பெயராக ரகுவரன் என்று அவரை பெருமைப்படுத்துவதற்காக அந்த பெயரை வைத்து அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன் என்று தனுஷ் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக பேசிய அவர் : “யாரடி நீ மோகினி” படத்தில் நடிக்கும் போதே ரகுவரன் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் முதல் நாள் சூட்டிங் வந்த போதே என்னை கட்டி அணைத்துக் கொண்டு என் மகனைப் போன்று இருக்கிறாய் என்று என்னை வாழ்த்தினார்.
அவருடன் அப்போதே எனக்கு நல்ல உறவு இருந்தது. அவருக்கு ஒரு படத்திலாவது மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காகவே வேலையில்லா பட்டதாரி படத்தின் கதாபாத்திரத்தை ரகுவரனாக வடிவமைத்து நடித்ததாகவும் தனுஷ் கூறியுள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான “யாரடி நீ மோகினி” படம் தான் ரகுவரனுக்கு கடைசி படம் என்பதும் அந்த படத்தில் தனுஷின் தந்தையாக ரகுவரன் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.





