இயக்குனர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்தவர் கௌதம் மேனன். மின்சார கனவு உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்த அவர், மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அங்கிருந்து தனது திரையுலக பயணத்தை தொடங்கிய அவர், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை கொடுத்தார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சூர்யாவை வைத்து அவர் துருவ நட்சத்திரம் படத்தை எடுக்க இருந்தார். ஆனால் திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரிந்தனர். இதன் பிறகு நடிகர் விக்ரமை வைத்து அவர் அந்தப் படத்தை எடுக்க ஆரம்பித்தார்.
விக்ரமுடன் ரித்து வர்மா, சிம்ரன், ராதிகா, பார்த்திபன், திவ்யதர்ஷினி, சதீஷ், விநாயகன் என ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இதன் சூட்டிங் பணிகள் ஆரம்பமாகி முழு வீச்சில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தை கௌதம் மேனனே தயாரித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசை அமைத்தார்.
இதில் ஜான் எனும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, வீடியோ ஒன்றும் வெளியானது. அதில் மிகவும் ஸ்டைலிசாக காணப்பட்ட விக்ரம், விமானத்திலிருந்து இறங்குவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதுவரை பார்த்திராத விக்ரம் இருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழ, பொருளாதாரப் பிரச்சினை காரணமாக சூட்டிங் முடங்கியது.
அதிலிருந்து மீள்வதற்காக சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் கௌதம் மேனன். ஒரு வழியாக கடந்த ஆண்டு மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட, அதிலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகளை மட்டும் படக்குழு நீக்கியது. இப்படியான சூழலில், நவம்பர் 24 ஆம் தேதி துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான டிரைலரும் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் படத்தை தயாரித்த கௌதம் மேனனுக்கு 30 கோடி ரூபாய் வரை கடன் இருப்பதாக கூறப்படுகிறது. துருவ நட்சத்திரத்திற்கான ஓடிடி உரிமமும் இன்னும் விலை போகவில்லை. இயக்குனருக்கு ஏற்பட்ட கடன் சுமையால் படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் படத்திற்கான ஓடிடி உரிமம் தொகையில் தனது கடனை அடைக்க கௌதம் மேனன் முழு வீச்சில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிக்கல் இல்லாமல் துருவ நட்சத்திரம் வெளியாகும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





