சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து தற்போது சாதித்துக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கென தமிழ் சினிமாவில் தனி மார்க்கெட் இருப்பதால், அதற்கான அந்தஸ்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக குடும்ப ஆடியன்ஸ்கள் சிவகார்த்திகேயன் பக்கம் இருக்கிறார்கள்.
இப்படி முக்கிய கதாநாயகர்கள் பட்டியலில் இருக்கும் சிவகார்த்திகேயன், ஆரம்பத்தில் அஜித் குமாரின் ஏகன் திரைப்படத்தில் ஒரு மிகச் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அதன் பாதியிலேயே சிவகார்த்திகேயன் நீக்கப்பட்டார். இதன்பிறகு அவருக்கு சரியாக வாய்ப்பு கிடைக்காமல் இருக்க, நீண்ட காலத்திற்குப் பிறகு மெரினா படத்தில் நடிக்கும் சான்ஸை கொடுத்தார் பாண்டி ராஜன்.
அதில் மிகக் குறைந்த நேரமே சிவகார்த்திகேயன் வந்து போனாலும் அவர் திரையில் தோன்றிய காட்சிகளில் எல்லாம் சிரிப்பு சத்தம் கேட்டது. இந்த சமயத்தில்தான் தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பளித்தார். தனது 3 திரைப்படத்தில் அவரை நடிக்க வைத்தார். அதில் தனுஷின் நண்பராக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார்.
அதில், பல கவுண்டர்களை ஒவ்வொன்றாக அடுக்கி சிரிப்பு சத்தத்திற்கு கேரண்டி கொடுத்திருப்பார் சிவகார்த்திகேயன். இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் என்னும் திரைப்படத்தை தயாரித்தார் தனுஷ். வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த துரை செந்தில்குமார் இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிவகார்த்திகேயனுக்கும் நாயகன் என்ற அந்தஸ்து கிடைத்தது.
தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் காக்கிச்சட்டை படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. பொதுவெளியில் இவர்கள் சந்தித்துக் கொள்ளவே இல்லை. இந்த நிலையில் தனது தயாரிப்பில் வெளியாக இருக்கும் சூரி நடிப்பில் கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், நான் இந்தப் படத்தை தயாரிப்பதால், நான் தான் இவர்களை அழைத்து வந்தேன். நான் தான் இவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் கூற மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படித்தான் கூறுகிறார்கள் என்று பேசினார்.
சிவகார்த்திகேயனின் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. தனுஷ் பெயரை அவர் குறிப்பிட்டு பேசவில்லை என்றாலும் அவரைத்தான் ஜாடையாக சிவகார்த்திகேயன் சொல்லியிருப்பதாக பலரும் தெரிவித்தனர். இந்த நிலையில், தனுஷின் பழைய வீடியோக்களை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். அதில் நம்பிக்கை துரோகம் குறித்தும், தான் வளர்த்து விட்டது குறித்தும் தனுஷ் பேசியதை அவர்கள் பகிர்ந்து சிவகார்த்திகேயனைத் திட்டி வருவதால் இணையத்தில் பனிப்போர் வெடித்துள்ளது.





