அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்று சொல்வதுண்டு. அது இப்போது சினிமாவுக்கும் பொருந்தும் போலிருக்கிறது. ஒரு இயக்குனரோ, நடிகரோ முதலில் மோதிக் கொண்டாலும் பிறகு அவர்களே வெற்றிப் படங்களை தரும்போது, அடுத்து தங்களது பழைய பகையை மறந்து மீண்டும் இணைந்து விடுகின்றனர்.
நடிகர் கவின் நடித்த ஸ்டார் படத்தை இயக்கியவர் இயக்குனர் இளன். இந்த படம் எதிர்பார்த்தபடி பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஒரு படமாக அமைந்தது. அதே நேரத்தில் நடிகர் கவினுக்கும் இந்த படம் நல்ல நடிப்பில் பெயரை வாங்கிக் கொடுத்தது. இப்போது கவின் நடிப்பில் அடுத்ததாக பிளடி பெக்கர் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.
நடிகர் கவின் நடித்த ஸ்டார் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ஹரீஷ் கல்யாண்தான். ஆனால் இயக்குனர் இளனுக்கும், நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கும் இந்த படத்தின் துவக்கத்திலேயே கருத்து வேறுபாடும், மனக்கசப்பும் ஏற்பட்டதால் அந்த படத்தில் நடிக்காமல் ஹரீஷ் கல்யாண் விலகி விட்டார். ஸ்டார் படம் வெளியான பிறகு, நல்ல வாய்ப்பை ஹரீஷ் கல்யாண் நழுவ விட்டதாக பலரும் விமர்சித்தனர்.
ஆனால் ஸ்டார் படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்க மறுத்த நிலையில், முதலில் இயக்குனர் இளன் அணுகிய நடிகர் தனுஷைதான். ஆனால் அவரும் அதற்கு சரியாக ரெஸ்பான்ஸ் தராத நிலையில், அடுத்ததாக தான் அந்த வாய்ப்பு நடிகர் கவினுக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கவின் நன்றாக பயன்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் லப்பர் பந்து படம் வெளியாகி, மாபெரும் வெற்றியை பெற்றது. இப்போது ரூ. 40 கோடிகளை வசூலில் கடந்து லப்பர் பந்து தியேட்டர்களில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பார்க்கிங் படத்துக்கு பிறகு ஹரீஷ் கல்யாணுக்கு இந்த படம் பெரிய வெற்றியை தந்திருக்கிறது.
லப்பர் பந்து படம் பார்த்த இயக்குனர் இளன், பழைய மனக்கசப்பை மறந்து ஹரீஷ் கல்யாணை அழைத்து மனதார பாராட்டியிருக்கிறார். அவரும் சந்தோஷமாக அவருடன் பேசியதால், நட்பு மீண்டும் துளிர்விட்டுள்ளது. அதனால் இப்போது ஹரீஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தை இளன் இயக்குவது உறுதியாகி விட்டது. கதை டிஸ்கஷன் நடந்து வருகிறது. நிச்சயம் இந்த கூட்டணி மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.





