தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாளியாக இருந்து வருகிறார் இயக்குனர் அமீர். நல்ல படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்த ஒரு முக்கியமான இயக்குனர் அமீர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே, பருத்திவீரன், ராம், ஆதி பகவான் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், பெரிய அளவில் வரவேற்பு பெற்றன.
தொடர்ந்து இயக்குனராக மட்டுமின்றி, சில படங்களில் நடித்தும் ரசிகர்கள் மனம் கவர்ந்தவர் அமீர். அந்த வகையில் வடசென்னை படத்தில் அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. அதே போல் யோகி என்ற படத்திலும் அவர் நடித்திருந்தார். இப்போது அவர் நடித்துள்ள படம் உயிர் தமிழுக்கு இந்த படம் வரும் 10ம் தேதி (நாளை மறுதினம்) வெளியாகிறது.
இந்த படத்தில் இதுவரை ஏற்காத புதிய கதாபாத்திரத்தில் அதாவது நகைச்சுவை வேடத்தில் அமீர் நடித்திருக்கிறார். மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை பார்த்த பலரும், நிச்சயமாக இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்றும் பேசப்படுகிறது. ஏனெனில் காமெடி ரோலில் அமீர் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் அமீர் எப்போதுமே தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசக்கூடியவர். எந்தவிதமான முகஸ்துதியும் இல்லாமல் எது குறித்தும், யாருக்கும் பயப்படாமல் தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அந்த கருத்துக்களை வெளிப்படையாக கூறும் தைரியமுள்ள ஒரு படைப்பாளியாக அவர் இருக்கிறார். இந்த வகையில் சமீபத்தில் தமிழ் படங்கள் ஏன் தொடர்ந்து தோல்வி அடைகின்றன என்பது குறித்து இயக்குனர் அமீர் பேசியிருக்கிறார்.
இயக்குனர் அமீர் கூறியதாவது, தமிழ் சினிமாவில் முக்கிய குறைபாடாக இருப்பது எதார்த்தமான கதைக்களம் தான். தமிழ் சினிமாவில் ஹீரோயிசம் அதிகமாக காட்டப்படுகிறது. ஒரு சில படங்களில் ஹீரோ என்ன பண்ண வேண்டும் என்பதை படத்தின் நடிகர்தான் முடிவு செய்கிறார். ஹீரோக்களுக்கு பில்டப் மிக மிக அதிகமாக கொடுக்கப்படுகிறது. எதார்த்தமான கதைகள் என்பதே தமிழ் சினிமாவில் இல்லாமல் போய்விட்டது.
என்னுடைய இமேஜுக்கு இப்படி ஒரு கேரக்டரில் நடிப்பதா என்று ஹீரோக்கள் யோசிக்கிறார்கள். கதைக்கு அவர்கள் முக்கியத்துவம் தருவதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் ஒரு நடிகருடைய இமேஜ் என்பது ஒரு நல்ல நடிகன் என்பதாக மட்டும்தான் இருக்க முடியும். அதை நிரூபிப்பதற்காக எப்படிப்பட்ட கேரக்டரிலும் அவர்கள் நடிக்கலாம். அதை விட்டுவிட்டு இன்னமும் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதனால் தமிழ் சினிமா படுகுழிக்குள் விழுகிறது என்று கூறியிருக்கிறார்.





