தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் மகன் ஏ எல் விஜய். இவர் அஜித் நடித்த கிரீடம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு கிடைத்த நல்ல விமர்சனத்தால், ஏ எல் விஜயின் திரையுலக வாழ்க்கை பாசிட்டிவ் எனர்ஜியுடன் தொடங்கியது. அடுத்த திரைப்படத்தையே நகைச்சுவை பாணியில் எடுக்க முயற்சி செய்து பொய் சொல்ல போறோம் திரைப்படத்தை எடுத்தார்.
ஆனால் இந்த திரைப்படம் வந்த இடமே தெரியாமல், திரையரங்குகளை விட்டுச் சென்றது. இதன் பிறகு, ஏ எல் விஜய் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மதராசபட்டினம். நடிகர் ஆர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனை இந்த திரைப்படம் கொடுக்க, எமி ஜாக்சன் இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேய பெண்ணுக்கும் இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்ததை கவித்துவமாக இந்த திரைப்படம் கூறியது.
இதனைத் தொடர்ந்து ஏஎல். விஜய் இயக்கிய திரைப்படம் தான் தெய்வத்திருமகள். விக்ரமின் ஒட்டுமொத்த நடிப்பிற்கும் தீனி போடும் விதமாக அமைந்த இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் நடித்த அனுஷ்கா அமலாபால் என அனைவரும் தனது பங்களிப்பை 100 சதவீதம் செலுத்தியதால் தெய்வத்திருமகள் படத்தை பலரும் கொண்டாடினர்.
இதன் பிறகு தளபதி விஜய் உடன் இணைந்து தலைவா படத்தை இயக்கினார். இதனிடையே படப்பிடிப்பு காலத்தில், அமலாவுடன் காதல் மலர, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் திருமண உறவு ஓராண்டிலேயே முடிந்தது. அமலா பாலிடமிருந்து விவாகரத்து பெற்ற ஏ எல் விஜய், டாக்டரை திருமணம் செய்தார். இதேபோல் அமலா பாலும் தனது பால்ய நண்பரை சமீபத்தில் கரம் பிடித்தார்.
இதனிடையே சமீப காலமாக ஏஎல் விஜய் இயக்கி வரும் திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்து வருகின்றன. தேவி, வனமகன், தியா, லட்சுமி, வாட்ச்மேன், தேவி 2, தலைவி என அனைத்து திரைப்படங்களும் வந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. இந்த நிலையில் தற்போது அருண் விஜயை வைத்து மிஷன் சாப்டர் ஒன் எனும் திரைப்படத்தை ஏ எல் விஜய் இயக்கியிருக்கிறார். இதில் நிமிசா சஜயன் எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் அதற்கான பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் காரில் சென்ற போது தேனாம்பேட்டை அருகே பைக்கில் சென்ற ஒரு நபர், இயக்குரின் காரை உரசி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஏ எல் விஜய்யை அந்த நபர் தாக்க முயற்சித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரின் உதவியாளரையும் அடித்துள்ளார். இது குறித்து இயக்குனர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





