தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யை வைத்து புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் அட்லி. குறும்படங்களை முதலில் இயக்கி வந்த அவர், தனது முகப்புத்தகம் குறும்படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார். அங்கிருந்து இயக்குனர் சங்கரின் உதவியாளராக சேர்ந்த அட்லி, எந்திரன் நண்பன் ஆகிய திரைப்படங்களில் பணிபுரிந்தார்.
இந்த சூழ்நிலையில்தான் ராஜா ராணி திரைப்படம் அவர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கினார். இந்த படங்கள் விமர்சன ரீதியாக சுமாராக இருந்தாலும், வசூலில் சக்கை போடு போட்டன.
ஆனால் படத்திற்கு படம் அவர் காப்பி அடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. மணிரத்னத்தின் மௌனராகம் திரைப்படம்தான் ராஜா ராணி, விஜயகாந்தின் சத்ரியன்தான் தெறி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள்தான் மெர்சல் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்தனர். சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படம் பல திரைப்படங்களின் காப்பி என்று பலரும் அட்லியை வறுத்தெடுத்தனர். இது தொடர்பாக பேசி இருக்கும் அட்லீ,
நான் எந்த திரைப்படங்களையும் காப்பியடிப்பதில்லை. இதற்கு முன்பு வெளியான பல்வேறு திரைப்படங்களில் சில ஒத்த கருத்துகள் இருக்கும். எதிர்காலத்திலும் இதே போல் தான் இருக்கும். ஆனால் இங்கு ஒவ்வொரு முறையும் என் மீதுதான் சர்ச்சைகள் வருகின்றன. ஒவ்வொரு திரைப்படத்திற்கும் நான் நேர்மையாக கதையை எழுதுகிறேன்.
காதல், போலீஸ் கதை, விளையாட்டு, கிராமம் என பல்வேறு வகைகளை சார்ந்த கதைகளை எடுக்கிறேன். நான் ஒரே மாதிரியாக இருக்கும் கதைகளை தொடக்கூடாது என்றுதான் நினைப்பேன். ஆனால் உண்மையில் அது போன்ற எந்த வகை கதைகளும் இருப்பதில்லை. இரண்டு கதாநாயகர்கள் கொண்ட கதையை நீ எப்போது கொண்டு வந்தாலும் சரி, நானும் விஜய் சாரும் நடிக்க தயாராக இருக்கிறோம் என்று ஷாருக்கான் என்னிடம் கூறியிருக்கிறார்.
தளபதி விஜய் அண்ணாவும் இதையேதான் என்னிடம் தெரிவித்தார். இதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். அனேகமாக விஜய்யும் ஷாருக்கானும் இணையும் திரைப்படம் தான் எனது அடுத்த படமாக இருக்கும். அதேசமயம் ஜவான் திரைப்படத்தை பார்த்துவிட்டு, மிகப்பெரிய ஹாலிவுட் நிறுவனம் ஒன்று, நாம் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் பணி புரிவோம் என்று கூறி இருக்கிறது. அதற்கான முன்னெடுப்புகளும் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.





