ஆரம்பத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் பாலா. 1999ம் ஆண்டில் வெளியான சேது படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விக்ரம் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. விக்ரமுக்கும் பாலாவுக்கும் இது பெரிய திருப்புமுடன படமாக அமைந்தது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகள் பயணித்துள்ள பாலா இதுவரை 10 படங்கள் கூட எண்ணிக்கையை தாண்டவில்லை. நந்தா நான் கடவுள் அவன் இவன் பரதேசி பிதாமகன் தாரை தப்பட்டை ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது பொங்கலுக்கு அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கிய வணங்கான் படம் ரிலீஸாகி இருக்கிறது.
இயக்குனர் பாலாவை பொருத்தவரை அவரது படங்கள் என்றாலே மிக வித்யாசமான கதைக்களத்தில் இருக்கும். படத்தில் பாடல்கள், இசை, காமெடி, சென்டிமென்ட் என பல விஷயங்கள் இருந்தாலும் படத்தில் ஏதாவது ஒரு குரூரத்தன்மை இருக்கும். அதனால் பாலா ஈவு இரக்கமின்றி கேரக்டர்களில் வன்மத்தை காட்டும் படங்களை தருபவர் என்ற கருத்தும் ரசிகர்களிடம் உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் நந்தா படத்தில் கருணாஸ் நடித்த லொடுக்கு பாண்டி கேரக்டர் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. அவன் இவன் படத்தில் விஷால் ஆர்யா பல காட்சிகளில் அட்டகாசமான காமெடியை தந்திருப்பர். பிதாமகன் படத்தில் சூர்யா மோசடி காமெடி காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கும்.
இயக்குனர் பாலா என்றாலே மிகவும் அழுத்தமான ஒரு கேரக்டர், அவரது மனதின் கோபத்தை வன்மத்தை தனது கேரக்டர்களில் வெளிப்படுத்துகிறார் என்று பலரும் கருதும் நிலையில், அவரது படங்களில் காமெடி பிரதானமாக இருந்திருக்கிறது. அதுவும் இயல்பாக ரசிக்கும்படியான காமெடி காட்சிகளும் வருகின்றன.
இதுபற்றி பாலா கூறுகையில், யாராவது ஒருவர் என்னுடன் தனியாக 15 நிமிடங்கள் இருந்தால் 3 நாளுக்கு சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. நினைச்சு நினைச்சு சிரிப்பாங்க. அப்படி ஒரு காமெடியன் நான் என்று நீயா நானா கோபிநாத் சந்தித்த ஒரு நேர்காணலில் இயக்குனர் பாலா சிரித்தபடி கூறியிருக்கிறார். இது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.





