தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். பாரதி கண்ணம்மா பொற்காலம் தவமாய் தவமிருந்து பாண்டவர் பூமி ஆட்டோகிராப் பொக்கிஷம் போன்ற படங்களை இயக்கியவர். சொல்ல மறந்த கதை ராமன் தேடிய சீதை பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களில் ஹீரோவாகவும் சேரன் நடித்திருக்கிறார்.
இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, வாக்கு என்பது நம் உரிமை. அதை விற்கக் கூடாது. 5000 ரூபாய்க்கு நீங்கள் விற்கும் ஓட்டால் 5 வருடம் நல்லாட்சியை இழக்கிறீர்கள். அரசால் எல்லோருக்கும் கிடைக்கும் எல்லா வசதிகளையும் முடக்குகிறீர்கள். எதிர் கேள்வி கேட்க ஆளில்லாத நிலையால் ஊழலையும் லஞ்சத்தையும் தலைவிரித்து ஆட வழி அமைத்துக் கொடுக்கிறீர்கள்.
ஆகையால் வாக்காளர்களே உங்கள் உரிமையை கையை உயர்த்தி இப்படித்தான் இனி வாக்களிப்போம் என்று உரக்க கூறி உங்களிடம் வாக்குக்காக பணம் தர வரும் அரசியல் பிரமுகர்களை விரட்டுங்கள். மாற்றம் கண்டிப்பாக நிகழும். அது நீங்கள் விரும்பும் ஆட்சியாக மலரும்.
வாரிசு அரசியல் வேண்டாம் என்றுதானே மன்னராட்சியை ஒழித்தோம். கருணாநிதி ஐயா ஸ்டாலின் ஐயா உதயநிதி ஐயா என்று வருகிறார்களே? இதுவே முரண்பாடாக இல்லையா? ஊழல் அதிகார துஷ்பிரயோகம் லஞ்சம் பெருகி கிடக்கிறது. போதைப்பொருள் சாதாரணமாக மாணவர்களிடம் புழங்குகிறது என்கிறார்கள்.
மலைகளை வெட்டி மழை இல்லாமல் செய்து விட்டார்கள். ஆற்று மணலை காணவில்லை. இவற்றையெல்லாம் யார் செய்தது? நான் ஏன் இதை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது. இது இரு தலைமைகளில் நடந்தது உண்மை என்றால் மாற்றுத் தலைவனை கண்டுபிடிக்க வேண்டும்.
திமுக அதிமுக தான் இங்கே ஆள வேண்டும் என்று யாரும் எழுதிக் கொடுக்கவில்லை. சுமார் 60 வருடங்களை இரண்டு பேருக்கும் கொடுத்து விட்டோம் என்று இயக்குனர் சேரன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருக்கிறார். நாம் தமிழர் கட்சி ஆதரவாக உள்ள இயக்குனர் சேரன், இந்த தேர்தல் சீமானுக்கு ஆதரவாக திமுக அதிமுக கட்சிகள் குறித்து எதிர் கருத்துகளை பேசி பதிவிட்டு வருவது கவனிக்கத்தக்கது.





