தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். பல படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த தமிழ் சினிமா எழுத்தாளர் சங்க தலைவர் தேர்தலில் இயக்குனர் சேரன் தலைவராக வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் பேசியதாவது, பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு சினிமாவாக கடைசி வரை எடுக்கப்படவே இல்லை. அது பெரிய உழைப்பு. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் இருந்திருக்கும். அந்த உழைப்பு எல்லாம் பாழாச்சு.
அதில் என்னோட உழைப்பு மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் இருந்திருக்கும். கிட்டத்தட்ட 15 பேர் அதற்காக பணியாற்றினோம். எல்லாம் போய் இடம் பார்த்து லொகேஷன் பார்த்து எங்கெங்கயோ அலைஞ்சு காடு மேடு எல்லாம் சுத்தி அந்த ஊரை கண்டுபிடித்தோம். ஏன்னா அது 1987 காலகட்ட வரலாறு. 87ல் இருந்து நடந்த விஷயங்களை பூராவும் பதிவு பண்ணனும். இப்ப போனா எல்லா இடத்திலும் 2026 அடையாளம். 87ஆண்டை ஊரை வில்லேஜ் எங்கே தேடுவது?
ஆனால் தமிழ்நாடு முழுக்க நாங்க அலைஞ்சு அந்த மாதிரி வில்லேஜையும் அந்த மாதிரி ரோடுகளையும் அந்த மாதிரி இடங்களையும் கண்டுபிடிச்சோம். அப்போ உள்ள ஆட்களோட தோற்றமே வேற. இப்போ அப்படி ஆளே இல்ல. முகமே இல்லை முழுசும் மாறி இருக்கு. அதை நாங்க ரெஃபரன்ஸ் வச்சு அவ்வளவு வேலை பார்த்தோம். ஒன்றரை வருஷம் நாங்க அதற்காக ஆராய்ச்சி பண்ணி அவ்வளவையும் திரட்டி வைத்ததற்கு அப்புறம் அந்த படம் நடக்கலே.
அது எவ்வளவு பெரிய வலி பாருங்க. உங்களுக்கு வேலை பார்த்த வரைக்கும் சம்பளம் கொடுத்துட்டேன்னு சொன்னாங்க. சம்பளம் முக்கியம் இல்ல. எங்களுடைய எண்ணம் நாங்க நினைத்தது நாங்க கற்பனை பண்ணுனது எங்களோட மண்டைக்குள்ள ஊறி அந்த கதை வெளியில வந்துச்சுன்னா அது எனக்கு சம்பளமே கிடைக்காட்டி கூட நான் கவலைப்பட மாட்டேன். ஏன்னா நான் அப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான இயக்குனர்.
நான் எடுத்த படம் வெளியே வரவேண்டும். ஆனால் அது வரல. அது நின்னுருச்சு. என்ன காரணம் என்று கேட்டால் அப்பா மகன் சண்டை போட்டாங்க படம் நின்னு போச்சு என்றார்கள் .இப்ப அப்பா மகன் சேர்ந்துட்டாங்க. படம் எடுக்க ஆள் இல்லை. என்ன பண்றது? இதுதான் அவலம். அது மாதிரியான சினிமா வந்து எங்கே நம்மளை தூக்கிட்டு போய்விடும். எங்கே நம்மளை ஏமாற்றும் எங்கே நம்மள உக்கார வைக்கணும்ன்னு தெரியாது என்று இயக்குனர் சேரன் ஆதங்கமாக பேசினார்.





