நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி படம் ரிலீஸ் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை படத்தின் டிரெய்லர் வெளியாகிறது.
இந்த படத்தை அதிரிபுதிரியாக வெங்கட்பிரபு உருவாக்கி இருப்பதாக சொல்லப்பட்டாலும் இதுவரை வெளியான 3 பாடல்கள், படத்தின் போஸ்டர்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. அதனால் டிரெய்லரில், ரசிகர்களை அசத்தி விட வேண்டும் என, இயக்குனர் வெங்கட்பிரபு பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்தாண்டில் வெளியான லியோ படம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றாலும், விமர்சன ரீதியாக இது தோல்வியை சந்தித்த படம்தான். அதனால் தி கோட் படம் வசூல் ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் பலத்த வெற்றியை பெற, படக்குழு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது 69வது படத்தில் மட்டுமே நடிப்பதாக அறிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் 70வது படத்திலும் நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் இருந்தாலும் அது இன்னும் விஜய் தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்படவில்லை. அதனால் இப்போதைக்கு விஜய் 69தான் உறுதியாக உள்ளது.
விஜய் 69 படத்தில் பிரேமலு நாயகி மமிதா பைஜூ விஜய்க்கு மகளாக நடிக்க கமிட் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார் என்பதை தவிர மற்ற விவரங்கள் எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் விஜய் தலைவராக உள்ள தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சிக்கு வலு சேர்க்கும் விதமான அதிரடி அரசியல் படமாக இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் விருது வழங்கும் விழா ஒன்றில் இயக்குனர் எச் வினோத் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், விஜய் 69 படத்தை இயக்குவது நான்தான் என்பதை உறுதியாக அறிவித்தார். மேலும், இந்த படம் அரசியல் படமாக இருக்காது. கமர்ஷியல் படம்தான் என்ற பெரிய உண்மையை போட்டுடைத்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.





