தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் கே பாக்யராஜ். இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சீடர். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷ கலைஞர்களில் முக்கியமானவர். கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் திரைப்படங்ளை இயக்குவதில் இருந்து விலகி திரைப்படங்களில் நடிப்பதில் பாக்யராஜ் அதிக கவனம் செலுத்தினார்.
அதனால் கடந்த 10, 15 ஆண்டுகளில் ஏராளமான திரைப்படங்களில் கே பாக்யராஜ் பல விதமான குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மறைந்த இயக்குனர் கே பாக்யராஜ் கடைசியாக நடித்த படங்களில் ஒன்று கன்னடத்து பைங்கிளி. அதில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் அவரது காதல் மனைவி பூர்ணிமா பாக்யராஜ் தான். டார்லிங் டார்லிங் டார்லிங் முந்தானை முடிச்சு ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.
இதில் 1983ல் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வருவார். ஊர்வசிதான் நாயகியாக நடித்திருப்பார். இந்நிலையில் கன்னடத்து பைங்கிளி படத்தின் இயக்குனர் சாய்ரமணி கூறியதாவது, கன்னடத்து பைங்கிளி படத்தில் கே பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு டி ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். பாக்யராஜூம் டி ராஜேந்தரும் இணைந்து பணியாற்றிய முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் தனது பகுதிகள் அனைத்தையும் பாக்யராஜ் சிறப்பாக நடித்துக் கொடுத்தார். இந்த படத்தை நன்றாக பிரமோட் செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்பினார். இன்னும் சில குளோசப் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டிய நிலையில் அவர் நம்மை விட்டுச் சென்று விட்டார். எனவே அந்த காட்சிகளை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்க உள்ளோம்.
43 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜூம் அவரது மனைவி பூர்ணிமாவும் இணைந்து நடித்த படமும் இதுதான். அதுவும் கணவன் மனைவியாகவே நடித்துள்ளனர். மறைந்த இயக்குனர் பாக்யராஜூக்கு அஞ்சலியை செலுத்தும் விதமாக கன்னடத்து பைங்கிளி படத்திற்காக அவர் நடித்த கடைசி காட்சியை வெளியிட்டுள்ளோம். காதல் மற்றும் காமெடி நிறைந்த இந்த படத்தில் நாயகனின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பாக்யராஜ் இடம் பெறுவார்.
புதுமுகங்கள் அமல்அஜித் ஆதியா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கின்றனர். சிங்கம்புலி புகழ் ஆதவன் லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஓசூரில் 1990 களில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என்று படத்தில் இயக்குனர் சாய் ரமணி கூறினார்





