இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம், கடந்த 10ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸானது. மாஸ்டர் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா உள்ளிட்டோர் நடித்த இந்த படம், பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக இந்த படத்தில் யானைகள் காட்சிகள், மலைப்பகுதிகள் என ஒளிப்பதிவாளர் திருவின் ஒளிப்பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர். வழக்கமாக திகில், பேய் படங்களில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் மிக வித்யாசமான நடிப்பை தந்திருப்பதும் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.
மார்க் ஆண்டனி படத்தில் நடிப்பு அரக்கன் என்ற பாராட்டை பெற்ற எஸ்ஜே சூர்யா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்த பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய நடிகவேள் என எஸ்ஜே சூர்யாவை பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகவேள் என்று அழைக்கப்பட்டவர் பழம்பெரும் நடிகர் எம்ஆர் ராதா என்பது குறிப்பிடத்தக்கது.
டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படம், குறிஞ்சி மலரை போன்றது. இதுபோன்ற மிகச்சிறந்த படங்கள் எப்போதாவதுதான் வரும் என்றும் ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார். படக்குழுவை கடிதம் மூலம் பாராட்டிய ரஜினி, நேரில் வரவழைத்தும் பாராட்டி இருக்கிறார். இது படக்குழுவுக்கு பெரிய உற்சாகத்தை தந்திருக்கிறது.
இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றியைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சந்தித்து இருக்கிறார். அப்போது படம் குறித்து பல கேள்விகளுக்கு அவர் பதில் தந்தார். அப்போது ஒரு செய்தியாளர், அழகாக இல்லை என்றாலும் நடிகை நிமிஷா நடிப்பு, சித்தா படத்தில் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த படத்தில் அவரை நீங்கள் நடிக்க வைக்க காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ், நிமிஷா அழகாக இல்லை என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? அது உங்களுடைய மைண்ட் செட். நீங்கள் யாரையும் அழகாக இல்லை என்று சொல்ல முடியாது, என நெத்தியடியாக பதில் தந்துள்ளார். அழகான தோற்றம் என்பது அவரவர் பார்வையை பொருத்தது. எல்லோருமே ஒரு விதத்தில் அழகுதான் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக நோஸ்கட் பதிலை தந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.





