மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே வேற லெவல் கதைக்களத்தில் அவர் உருவாக்கிய இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் பேசப்பட்டது. காட்சிக்கு காட்சி திருப்புமுனையாக சம்பவங்களை ஒன்றன்பின் ஒன்றாக கொண்டு வந்து படம் முழுவதும் விறுவிறுப்பான ஒரு கதைக்களத்தில் மாநகரம் படத்தை அவர் தந்திருந்தார்.
இதையடுத்து கார்த்தி நடித்த கைதி படத்தை 57 இரவுகள் படப்பிடிப்பு நடத்திய நிலையில், அரை நாள் மட்டுமே பகலில் ஷூட்டிங் நடத்தியிருந்தார். இந்த படத்தில் நாயகி இல்லை. ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களே கதைக்களமாக இருந்தது. இந்த படமும் அபார வெற்றியை பெற்றது. அதன்பிறகு விஜய் நடித்த மாஸ்டர், கமல் நடித்த விக்ரம் படங்களும் மாஸ் ஹிட் ஆன நிலையில், லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனராக மாறிவிட்டார்.
அடுத்து விஜய் நடித்த லியோ படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக லியோ, லோகேஷ் கனகராஜ் படம் போலவே இல்லை என்றும் ரசிகர்களால் பேசப்பட்டது. இப்போது கூலி படத்தை அவர் தனது 6வது படமாக இயக்கி உள்ளார். முதன் முறையாக ரஜினிகாந்துடன் இணைந்திருக்கிறார். சத்யராஜ் உபேந்திரா சௌபிர் சாஹிர் அமீர்கான் நாகர்ஜூனா ஸ்ருதிஹாசன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறது.
வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி கூலி படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. அதன்பிறகு ஆகஸ்ட் 14ம் தேதி பான் இந்தியா படமாக தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கூலி வெளியாகிறது. மேலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கூலி வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, நான் அன்று சொன்னதை மீண்டும் ஒருமுறை இப்போதும் சொல்கிறேன். கண்டிப்பாக கூலி படம் பார்க்க தியேட்டருக்கு வருபவர்கள் திருப்தி இல்லாமல் திரும்பிப் போவதற்கு வாய்ப்பே இல்லை.
நீங்க என்ன ஒரு அமெளண்ட் கொடுத்து அதாவது பிளாக்கில் இல்லாமல் தியேட்டரில் கொடுத்து படம் பார்க்க வருகிறீர்களோ அதுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு மன திருப்தியோடுதான் திரும்பி செல்வீர்கள். அதுக்கு நான் கேரண்டி. அந்தளவுக்கு ஒரு திருப்தியான படமாக கூலி இருக்கும் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.





