மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே இவரது இயக்கம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மாநகரம் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அவர் இயக்கிய கைதி படமும் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மாஸ் ஹிட் படமாகவும் அமைந்தது.
பருத்திவீரன், தோழா, சிறுத்தை, அலெக்ஸ்பாண்டியன், கொம்பன் என பல வெற்றிப் படங்களை கொடுத்த கார்த்திக்கு, கைதி படம் கார்த்தியின் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய படமாகவும் அமைந்து வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கினார்.
இதில் விக்ரம் படம் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அவருக்கு கம்பேக் படமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம், விமர்சனம் ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மாஸ்டர் படமும் வெற்றி படமாக அமைந்தது.
இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்து விட்டதாக சமீபத்தில் ஒரு நேர்காணையில் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். கைதி படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து, கைதி 2ம் பாகம் வெளியாகும் என்று அப்போதே தெரிவிக்கப்பட்டது. இப்போது சர்தார் 2 படத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் நிலையில், அந்த படத்தை முடித்துவிட்டு கைதி 2 படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்.
அதேபோல் கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அதை முடித்துவிட்டு கைதி 2 படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆக்சன் திரில்லர் படமாக 2019ம் ஆண்டில் வெளியான கைதி படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. கைதி படத்தில் கதாநாயகி கிடையாது. பாடல்கள் கிடையாது. படம் முழுக்க முழுக்க இரவில் நடக்கும் சம்பவங்களாக இருக்கும். 57 இரவுகளில் தொடர்ந்து இந்த படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கைதி படம் வெளியாகி தற்போது 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார். அதில், எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியது. கார்த்தி மற்றும் எஸ் ஆர் பிரபுவுக்கு நன்றி. இவர்களால் தான் லோகேஷ் யுனிவர்ஸ் சாத்தியமானது. விரைவில் டில்லி திரும்ப வருவார், எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் கூலி படத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் கைதி 2ம் பாகத்தை இயக்க உள்ளதை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார் என்பது ரசிகர்களை கொண்டாட்டம் அடைய செய்துள்ளது.





