நடிகர் விஜய் நடித்த படங்களில் கமர்ஷியலாக மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படங்கள் திருப்பாச்சி மற்றும் சிவகாசி. இந்த 2 படங்களையும் இயக்குனர் பேரரசு இயக்கி இருந்தார். திருப்பாச்சி படத்தில் திரிஷாவும் சிவகாசி படத்தில் அசினும் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தனர்.
இந்த 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களாக நடிகர் விஜய்க்கு பெரிய இமேஜை பெற்றுத் தந்தது. ஏறக்குறைய 2 படங்களுமே தங்கை பாசத்தை மையப்படுத்திய படங்களாக தான் இருந்தன. திருப்பாச்சி படத்தில் தங்கைக்கான சென்னை ரவுடிகளை ஒழிக்கும் ஒரு கேரக்டரில் விஜய் நடித்திருந்தார்.
அதே போல் சிவகாசி படத்தில் தங்கைக்காக, வில்லனான அண்ணன் பிரகாஷ் ராஜை அரசியலில் எதிர்க்கும் ஒரு கேரக்டரில் விஜய் அட்டகாசமாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் தங்கைக்காக அண்ணன் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது போல் ஒரு பாடல் காட்சி வரும்.
கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வர்றியா என்ற அந்த பாடல் காட்சியில் நடிகர் விஜய் உடன் நடிகை நயன்தாரா சிறப்பு நடனம் ஆடியிருந்தார். இந்த பாடலை எழுதியது படத்தின் இயக்குனர் பேரரசுதான். அந்த பாடலை பாடியவர் நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர். அதில் ஒரு வரியில் நாளைக்கு நீங்களும் சிஎம்தான் என்று கூறப்பட்டிருக்கும்.
இதுகுறித்து சிவகாசி படத்தின் இயக்குனர் பேரரசு சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, சிவகாசி படத்துல ஏழைங்க பாழைங்க நெனச்சுபுட்டா நாளைக்கு நீங்களும் சிஎம்முதான் அப்படீன்னு 21 வருஷத்துக்கு முன்னாடியே அந்த பாட்டுல நான் எழுதியிருப்பேன்.
சில பாடல் நாம கற்பனை பண்ணி நாம சிந்தித்து எழுதுவோம். ஆனால் சில பாடல் ஆண்டவன் எழுதத் தூண்டுவான். இதுல ஆச்சரியம் என்னன்னா அதை பாடுனது விஜய் சாரோட அம்மா தான். நம்ம எழுதுனதை விட பெத்த தாயோட வாக்கு பலிக்கும் என்று இயக்குனர் பேரரசு பெருமிதமாக கூறியிருக்கிறார்.





