தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் விக்ரமன். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ராஜகுமாரன். நீ வருவாய் என என்ற படம் மூலம் ராஜகுமாரன் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் பார்த்திபன் தேவயானி அஜீத்குமார் ரமேஷ் கண்ணா வையாபுரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை வெற்றியை பெற்றது.
அதன் பிறகு விண்ணுக்கும் மண்ணுக்கும் திருமதி தமிழ் காதலுடன் உள்ளிட்ட படங்களை ராஜகுமாரன் டைரக்ட் செய்தார். ஆனால் இதில் எந்த படமும் சரியாக போகவில்லை. ஆனால் அவர் இயக்கிய 4 படங்களிலுமே தேவயானி தான் கதாநாயகியாக நடித்திருந்தார். விண்ணுக்கும் மண்ணுக்கும் படப்பிடிப்பின் போது நடிகை தேவயானிக்கும் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நடிகை தேவயானி ராஜகுமாரனின் கரம் பிடித்தார். இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். தேவயானி தொடர்ந்து படங்களில் நடித்துவரும் நிலையில் இயக்குனர் ராஜகுமாரன், அதன் பிறகு படங்களை இயக்கியதாக தெரியவில்லை. ஆனால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் காமெடி ரோலில் நடித்திருந்தார். தொடர்ந்து கடுகு என்ற படத்திலும் ராஜகுமாரன் நடிப்பு சிறப்பாக இருந்தது.
இந்நிலையில் சமீபகாலமாக இயக்குனர் ராஜகுமாரன் நேர்காணல்களில் பங்கேற்று தனது சினிமா அனுபவங்கள் குறித்து பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, நான் டைரக்டர் ஆன பிறகும் என்னுடைய மாத செலவு 1500 ரூபாய்தான். அதற்கு மேல் நான் செலவு செய்ததில்லை. நான் தங்கி இருந்த வீட்டுக்கு 1000 ரூபாய் தான் வாடகை. மாதம் 500 ரூபாய் தந்தால் மேலே உள்ள வீட்டில் சமைத்து தினமும் காலை மாலை உணவு தந்து விடுவார்கள்.
அதனால் மாதம் 1500 ரூபாய் இருந்தாலே எனக்கு போதுமானது. விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் வரைக்கும் என்னுடைய மாத செலவு 1500 ரூபாய்தான். தேவயானி என்னை கல்யாணம் பண்ண வந்தபோது அவர் வெறும் கையை வீசிக்கொண்டு தான் வந்தார். போட்டுக்க டிரஸ் கூட எடுக்காமல் தான் அவர் வந்தார்.
நான் சிறுக சிறுக சேர்த்து வைத்த காசில்தான் அவருக்கு 10 செட் டிரஸ் எடுத்து கொடுத்தேன். வங்கியில் அப்போது என்னுடைய கணக்கில் 3 லட்சம் ரூபாய் வரை பணம் இருந்தது. அதை வைத்துதான் அப்போதைய செலவுகளை நான் சமாளித்தேன். அந்த பணம்தான் எனக்கு கை கொடுத்து உதவியது என்று இயக்குனர் ராஜகுமாரன் கூறியிருக்கிறார்.





