தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமானவர் பா ரஞ்சித். முதல் படமே பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கினார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி காலா படங்களை இயக்கிய பா ரஞ்சித் நட்சத்திர இயக்குனராக முன்னணி இடத்துக்கு வந்தார்.
தொடர்ந்து சார்பட்டா பரம்பரை தங்கலான் படங்களை இயக்கிய பா ரஞ்சித் இப்போது வேட்டுவம் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இதுதவிர சார்பட்டா பரம்பரை படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கவும் அவர் முயற்சித்து வருகிறார். நீலம் புரடக்சன்ஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் பா ரஞ்சித் உள்ளார்.
இந்நிலையில் அதியன் ஆதிரை இயக்கத்தில் நீலம் புரடக்சன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டெக் புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாக்கிய படம் தண்டகாரன்யம். இந்த படத்தில் தினேஷ் கலையரசன் ஷபீர் பாலசுரவணன் முத்துக்குமார் ரித்விகா வின்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற 19ம் தேதி தண்டகாரன்யம் படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் தண்டகாரன்யம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் பா ரஞ்சித் பேசியதாவது. நாங்கள் இங்கு பணம் சம்பாதிக்கும் தொழில் நோக்கத்துடன் வரவில்லை. சமூகத்தை சரி செய்ய வேண்டும் என்கிற முனைப்போடு வந்திருக்கிறோம்.
நான் இயக்குனராக வரும்போது வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே இருப்பேன் என நினைத்தேன். ஏனெனில் நான் பேசக்கூடிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தேன். இருப்பினும் மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டனர். முன்பெல்லாம் இடதுசாரிகள் அதிகம் இருப்பார்கள். தற்போது இருக்கக்கூடிய சென்சார் போர்டில் வலதுசாரிகள் அதிக அளவில் இருக்கிறார்கள்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் கூட ராப் இசைக்கலைஞர்களுக்கு மிகப்பெரிய பங்கானது இருக்கிறது. நீலம் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வேட்டுவம் பைசன் படங்கள் வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது என்று இயக்குனர் பா ரஞ்சித் அந்த விழாவில் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





