இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளது. விரைவில் இந்த படம் ரூ. 300 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சூர்யாவுக்கு பல ஆண்டுகளுக்கு ஒரு கம்பேக் படமாக கருப்பு வெற்றியை தந்துள்ளது.
இதற்கிடையே படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி பல்வேறு ஊர்களுக்கு கருப்பு படக்குழுவினருடன் நேரில் சென்று தியேட்டர்களுக்கு விசிட் செய்து கருப்பு படம் குறித்த பிரமோசனில் ஈடுபட்டு வருகிறார். தியேட்டர்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடி படத்துக்கு இன்னும் ஹைப் ஏற்றி வருகிறார்.
முதலில் கருப்பு படத்தில் நடிகர் விஜய் நடிக்க இருந்ததாகவும் அவர் நடிக்க முடியாமல் போன நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் சூர்யா நடித்ததாகவும் ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி கூறியிருந்தார். மேலும் விஜய்க்கு பதிலாக சூர்யா நடித்ததால் திரைக்கதையில் சில திருத்தங்கள் மாற்றங்கள் செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு போய் விட்டதால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மையல்ல. அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது.
அவர் நடிப்பை விட்டு சென்றாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழ் சினிமாவில் நிறைய நட்சத்திர நடிகர்கள் உள்ளனர். நடிகர் சூர்யா போன்ற நட்சத்திர நடிகர்கள் இருக்கும் போது அப்படி சினிமாவில் வெற்றிடம் உள்ளதாக கருதவே முடியாது.
மக்கள் நல்ல படங்களை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்த்தாலே தெரிகிறது. அதனால் விஜய் சினிமாவை விட்டு போனதால் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாக சொல்வதில் சிறிதும் உண்மையில்லை என்று இயக்குனர் ஆர்ஜே பாலாஜி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





