தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. குறிப்பாக செம்பருத்தி மக்கள் ஆட்சி அரசியல் புலன் விசாரணை கேப்டன் பிரபாகரன் ராஜமுத்திரை என பல படங்களை தந்திருக்கிறார். செம்பருத்தி படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடிகை ரோஜாவை ஆர்கே செல்வமணி அறிமுகம் செய்து வைத்தார்.
ஒரு கட்டத்தில் நடிகை ரோஜாவை, ஆர்கே செல்வமணி காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இப்போது இயக்குனர் ஆர்கே செல்வமணி பெப்சி அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார். நடிகை ரோஜா, ஆந்திராவில் அரசியலில் இருந்து வருகிறார்.
கடந்த முறை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நடிகை ரோஜா, அமைச்சராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலைச் சொல்லும் கதைக்களத்தில் 300 கோமாளிகள் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பா.கிரிஷ் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் அலெக்ஸ் செல்ல முத்தையா அக்னி மோகன் விக்னேஷ் ரவி உள்ளிட்ட சிலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். 300 கோமாளிகள் திரைப்படம் 14 வது கொல்கத்தா சர்வதேச குறும்பட விழாவில் திரையிட தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் சமீபத்தில் நடந்த 300 கோமாளிகள் பட விழாவில் பெப்சி அமைப்பின் தலைவர், இயக்குனர் ஆர் கே செல்வமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார். அந்த படத்தின் விழாவில் இயக்குனர் ஆர்கே செல்வமணி பேசியதாவது, எல்லோரும் உழைக்கிறோம். ஆனால் வெற்றிக்கு ஏற்ற சம்பளம் தான் கிடைக்கிறதே தவிர உழைப்புக்கேற்ற சம்பளம் கிடைப்பதில்லை.
சினிமாவை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோம். ஒரு திரைப்படத்தில் யார் யார் வேலை பார்க்கிறார்கள், அவர்கள் அனுபவம் என்ன என்பது போன்ற அனைத்தையும் தரவுகளாக தொகுத்து அரசாங்கத்துக்கு கொடுக்கலாம். இதை ஒரு தொழிலாக அங்கீகரிக்க கோரி முறையிடலாம்.
ஹாலிவுட்டில் மட்டும்தான் நடிகர்களின் சம்பளம் வெற்றி தோல்வி அனைத்தையும் வெளிப்படையாக வைத்திருக்கிறார்கள். இந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் அந்த வெளிப்படத் தன்மையே கிடையாது. இதுதான் வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது என்று ஆர்கே செல்வமணி அந்த விழாவில் ஆதங்கமாக பேசினார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





