தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்ஏ சந்திரசேகர். சட்டம் ஒரு இருட்டறை என்ற 1981ம் ஆண்டில் வெளிவந்த படம் மூலம் எஸ்ஏ சந்திரசேகர் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து நீதியின் நிழல் நண்டு நான் சிகப்பு மனிதன் நான் அடிமை இல்லை ஒரு கைதியின் டைரி சட்டம் ஒரு விளையாட்டு நீதிக்கு தண்டனை நல்லவன் வாழ்வான் சட்டம் ஒரு கேள்விக்குறி தீர்ப்புகள் திருத்தப்படலாம் சுக்ரன் உள்ளிட்ட பல படங்களை எஸ் ஏ சந்திரசேகர் டைரக்ட் செய்திருக்கிறார்.
அவர் இயக்கிய படங்களில் சில காட்சிகளில் மட்டுமே நடித்த எஸ்ஏ சந்திரசேகர் ஒரு கட்டத்தில் அவர் நடிகராகவும் மாறினார். கொடி டிராபிக் ராமசாமி மாநாடு
உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஒரு டிவி சீரியலிலும் எஸ்ஏ சந்திரசேகர் நடித்திருக்கிறார். அவரது மனைவி ஷோபா சந்திரசேகர் பல படங்களில் பாடியிருக்கிறார். நடிகர் விஜயுடன் ஒரு நகைக்கடை விளம்பர படத்திலும் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக கொண்டாடப்படும் இயக்குனர் ஷங்கர், இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரின் சீடர்தான். எஸ்ஏசி இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக ஷங்கர் பணிசெய்திருக்கிறார். ஓரிரு படங்களில் சில காட்சிகளில் ஷங்கரை எஸ்ஏ சந்திரசேகர் நடிக்கவும் செய்திருந்தார். தனது குருவுக்கு செய்யும் மரியாதையாக, நண்பன் படத்தில் அவரது மகன் விஜயை நடிக்க செய்தார்.
இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் ஆரம்பம் முதலே புரட்சிக்கரமான கருத்துகளை தனது படங்களின் கதைக்களமாக கொண்ட படைப்புகளை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்தவர். குறிப்பாக சட்டம் நீதி அரசியல் சமுதாய அவலங்கள் குறித்த அவரது படங்கள் 1980களில் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இப்போதும் நல்ல ஒரு திரை ஆளுமையாக எஸ்ஏ சந்திரசேகர் கவனம் பெறுகிறார்.
இதற்கிடையே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் பேசியதாவது, எம்புள்ளைய நானும் அப்படிதான் வளர்த்து வெச்சிருக்கேன். உன் பொறந்த நாளா? கொண்டாட்டம் எல்லாம் வேண்டாம்பா. உன் பொறந்த நாள் அன்னைக்கு உன்னால ஏதாவது நல்லது பண்ண முடியுமா? ஒரு 400 இடத்துல ஏதாவது நல்லது நடக்குமா? தமிழ்நாடு முழுக்க 400 இடங்களில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் ஏழைங்க அவங்களுக்கு அன்னைக்கு ஏதாவது ஒரு நல்லது நடக்குமா?
அதை பண்ணச் சொல்லு உன் ரசிகர்களை வெச்சு. அதுதான் உண்மையான பொறந்த நாள். நண்பர்களை கூட்டிக்கிட்டு தண்ணீ அடிக்கிறது பொறந்த நாள் இல்லே. உண்மையான பிறந்த நாள் என்றால் உன்னால மற்றவர்கள் பயனடையணும். அதாவது வாழ்க்கை என்பது சாகும் வரை அல்ல என்று ஒரு விழாவில் இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஏ சந்திரசேகர் பேசியிருக்கிறார்.





