நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் புகழ் பெற்ற நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். குறிப்பாக 1990ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் காமெடியில் ஒரு கலக்கு கலக்கியவர் வைகைப்புயல் வடிவேலு என்றால் அது மிகையல்ல. பல படங்கள் அவரது காமெடிக்காகவே ஓடியது என்றால் அதுவும் உண்மைதான்.
நடிகர் வடிவேலுக்கு வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவரது வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியது இயக்குனர் வி சேகர் இயக்கிய படங்களில் வடிவேலு நடித்ததுதான். குறிப்பாக விரலுக்கேத்த வீக்கம் காலம் மாறிப்போச்சு நான் பெத்த மகனே பொங்கலோ பொங்கல் வரவு எட்டணா செலவு பத்தணா கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என பல படங்களில் வடிவேலு நடித்திருந்தார்.
ஆட்டோ டிரைவர் கொசுமருந்து அடிக்கும் நகராட்சி ஊழியர் அரசியல்வாதி படித்த பட்டதாரி வாலிபர் போன்ற கேரக்டர்களில் வடிவேலுவுக்கு தனது படங்களில் நடிக்கும் வாய்ப்பை வி சேகர் தந்திருந்தார். இந்த படங்களில் நடித்த போது நடிகர் வடிவேலு இமேஜ் பெரிய அளவில் உயர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேர்காணல் ஒன்றில் இயக்குனர் வி சேகர் கூறியதாவது, வடிவேலு பல படங்களில் நடித்து சினிமாவில் பெரிய ஆளாக வந்தார். பல படங்கள் நடித்தார். பல கோடிகள் சம்பளம் வாங்கினார். ஆனால் அவர் பழைய டைரக்டர்களுக்கு கால்ஷீட் தரவேண்டும். பழைய டைரக்டர்களுடன் படம் பண்ண வேண்டும் என்று நினைக்கவே இல்லை.
ஒரு போன் பண்ணியாவது என்ன பண்றீங்க எப்படி இருக்கறீங்கன்னு கேட்கணும் இல்லே. இதுவரைக்கும் ஒரு போன் கூட பண்ணியது இல்லே. நடுவுல ஒரு படம் பண்ணும்போது அவருக்கும் எனக்கும் மோதல் ஏற்பட்டு விட்டது. கவுண்டமணிக்கு ஒரு படத்தில் மகனாக வடிவேலு நடிப்பதாக இருந்தது.
ஏனென்றால் கவுண்டமணி அப்பா, வடிவேலு மகன் என்றால் அது வித்யாசமாக, புதுமையாக இருக்கும் என்று நான் ஆசைப்பட்டேன். அதற்கு கவுண்டமணி சம்மதிக்கவில்லை. அப்படி நடித்தால் அடுத்த படத்தில் இருந்து நான் மகனாகி விடுவேன், அவன் அப்பனாகி விடுவான், பயங்கர ஆளுப்பா அவன் என்று கூறிவிட்டார். அதில் இருந்து வடிவேலு என்னுடன் பேசுவதில்லை, என்று இயக்குனர் வி சேகர் கூறியிருக்கிறார்.





