நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று அழைக்கப்படுகிறார். இப்போது, மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை துவங்கி, ஒரு அரசியல் தலைவராக தமிழக அரசியலில் முழு வீச்சில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். படங்களில் நடிப்பதோடு, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்கிறார்.
ரஜினிகாந்த் போலவே, கமல்ஹாசனும் பொது இடங்களில் ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி சிக்கிக் கொள்பவர்தான், அவரோடு செல்பி எடுக்கவும் ஆட்டோகிராப் வாங்கவும், ரசிகர் கூட்டம் அலைமோதும். அப்படிபட்ட கமல்ஹாசன் அருகில் நிற்கும்போது, அவரை விட்டு விட்டு அங்கிருந்த பலரும் மற்றொருவரிடம் ஆட்டோகிராப் வாங்கி இருக்கின்றனர்.
இதற்கு அவர் அப்போது மிக பிரபலமான நடிகரும் அல்ல. என்றாலும், அங்கிருந்த ரசிகர்கள் பலரும் கமல்ஹாசனை கண்டுகொள்ளாமல் அவரிடம் முண்டியடித்து ஆட்டோகிராப் வாங்கியுள்ளனர். அதுகுறித்து சுவாரசியமான தகவல்களை அவர் இப்போது பகிர்ந்துள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டில், கமல் நடிப்பில் விருமாண்டி படம் வெளிவந்தது. இந்த படத்துக்கு முதலில் சண்டியர் என பெயர் வைக்கப்பட்டு, பிறகு சர்ச்சை ஏற்பட்டதால் விருமாண்டி என பெயர் மாற்றப்பட்டது. இதில் அபிராமி, பசுபதி, நெப்போலியன், ரோகிணி உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். கதாநாயகனும், வில்லனும் அவர்களது கோணங்களில் கதை சொல்லும்படி திரைக்கதை வித்யாசமாக அமைக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில், ஜல்லிக்கட்டு காட்சிகள் இருந்ததால் ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்பாடு செய்ய, கமல்ஹாசன் பல கிராமங்களுக்கு சென்றிருக்கிறார். அப்போது, ரசிகர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்க, நீளமான தொப்பி, முகத்தை பாதி மறைக்கும் பெரிய கூலிங்கிளாஸ், பெர்மூடாஸ் டவுசர் எல்லாம் அணிந்து, தன் அடையாளமே தெரியாதபடி கமல், காளைகளை பார்க்க கிராமங்களுக்கு சென்றுள்ளார்..
அப்போது, அந்த படத்தில் நடித்தவரும், கமலின் நெருங்கிய நண்பருமான பட்டிமன்ற பேச்சாளர் கு. ஞானசம்பந்தன் கமலுடன் சென்றிருக்கிறார். பட்டிமன்றங்களில் டிவியில் நடுவராக பேசிய அவர் சற்று பிரபலம் என்பதால், அவருக்கு அருகில் வித்யாசமான கெட்டப்பில் இருந்த கமல்ஹாசனை அடையாளம் தெரியாமல் பலரும், ஞானசம்பந்தனிடம் முண்டியடித்துக்கொண்டு போய் ஆட்டோ கிராப் வாங்கி இருக்கின்றனர். இதை பார்த்து கமல்ஹாசன் வாய்விட்டு சிரித்த தகவலை இப்போது பகிர்ந்திருக்கிறார் பட்டிமன்ற பேச்சாளரும், நடிகருமான கு, ஞானசம்பந்தன்.





