பிரபல இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பிறகு பாரதி கண்ணம்மா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். தொடர்ந்து பொற்காலம் வெற்றிக்கொடி கட்டு தவமாய் தவமிருந்து ஆட்டோகிராப் பாண்டவர் பூமி என பல வெற்றிப் படங்களை சேரன் ரசிகர்களுக்கு கொடுத்தார்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு அவர் இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. குறிப்பாக திருமணம் பொக்கிஷம் மாயக்கண்ணாடி போன்ற படங்கள் சேரன் இயக்கத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே இயக்குனர் சேரன் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.
அதிலும் குறிப்பாக பிரிவோம் சந்திப்போம் சொல்ல மறந்த கதை ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சமீப காலமாக சேரன் நடிகராக இயக்குனராக பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இந்த சூழலில் சமீபத்தில் நல்ல காதல் கள்ளக்காதல் குறித்து அவர் பேசிய விவகாரமும் இணையத்தில் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.
சமீபத்தில் சேலத்தில் நடந்த விழா ஒன்றில் இயக்குனர், நடிகர் சேரன் பங்கேற்றார். அப்போது சேரன் பேசியதாவது, நான் யாரையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை. நான் இருக்கும் இடத்தில் எல்லோரையும் சந்தோசமாக வைத்துக் கொள்வேன். என்னுடைய படத்தில் வில்லனே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நான் வில்லன்களை விரும்புவதில்லை. அதே நேரத்தில் நானும் வில்லனாக இருப்பதில்லை. இதுதான் என்னுடைய வாழ்க்கை முறை.
எனக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. கடன் நிறைய இருக்கிறது. அதனால் என்னால் படம் எடுக்க முடியவில்லை. படம் எடுக்க தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. கதை சொல்வதற்கு போனால் ஹீரோக்கள் கதை கேட்க மறுக்கிறார்கள். இந்த மாதிரி நிறைய பிரச்சனைகள் இருக்கிறது.
ஆனால் நான் நிம்மதியாக தூங்குகிறேன். சந்தோசமாக இருக்கிறேன். அதற்கு காரணம் என்னவென்றால் வாழ்க்கையை ஈஸியாக எடுத்துக் கொண்டேன். எல்லாவற்றையும் கடக்கும் சக்தி நம்மிடம்தான் உள்ளது. எல்லோரையும் நேசியுங்கள். சிரித்த முகத்துடன் அன்பாக பேசுங்கள். எல்லா பிரச்சினைகளும் சரியாகி விடும் என்று நடிகர் சேரன் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





